ராஜன் குறை
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கொள்கை முழக்கமாக அ.இ.அ.தி.மு.க “தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!” என்று அறிவித்துள்ளது. இது கேட்பதற்கு நன்றாக ஒலிக்கிறது; ஒரு மாநிலக் கட்சியின் சரியான அறைகூவல் என்றுதான் தோன்றுகிறது.
இதில் பிரச்சினை என்னவென்றால் இந்தத் தேர்தல் ஒன்றிய அரசில் யார் ஆட்சி செய்வது என்பதைக் குறித்தது. இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒன்று பாஜக கட்சியின் NDA என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதுதான் இப்போது ஆட்சியில் உள்ளது. அது நரேந்திர மோடியை முக்கிய பிம்பமாக, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. அதற்கு எதிராக INDIA என்ற இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கக் கூட்டணி போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸும், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான தி.மு.க இந்தியா கூட்டணியின் முக்கிய உறுப்பினராக உள்ளது. பாஜக-வின் ஜனநாயக விரோத, கூட்டாட்சி விரோத போக்கினை எதிர்த்து தீவிரமான பிரச்சாரத்தை அனைத்து இந்தியா கூட்டணிக் கட்சிகளும் முன்னெடுத்துள்ளன. இந்தக் கூட்டணி முன்வைக்கும் முக்கிய பிரச்சினையே மாநில உரிமை மீட்புதான்.
கடந்த பத்தாண்டுகளாகவே தி.மு.க நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் இந்த எதிர்ப்பினை வெளிப்படுத்தி வென்றுள்ளது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் பாஜக எதிர்ப்பில் முன்னணியில் உள்ளது தி.மு.க.
பாரதீய ஜனதா கட்சி மாநில உரிமைகளைப் பறிப்பதாக, மாநிலங்களுக்கு வரிப் பகிர்விலும் நிதி நிர்வாகத்திலும் அநீதி இழைப்பதாக கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுடன் தி.மு.க இணைந்து குரல் கொடுத்து வருகிறது. அரசியல் என்ற அளவில் ஆளுநர்களின் வரம்புமீறிய செயல்களையும் இந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்த்துப் போராடி வருகின்றன.
இந்த நிலையில் “தமிழர் உரிமை காப்போம்! தமிழ்நாடு மீட்போம்!” என்ற முழக்கம் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான முழக்கமாகத்தான் பொருள் தரும். ஏனெனில், தமிழர் உரிமைகளைப் பறிப்பது பாஜக என்பதுதான் இந்தத் தேர்தலில் முக்கியமான பிரச்சினை. அதற்கான உதாரணங்கள் ஏராளமாக கடந்த ஐந்தாண்டுகளில் சேர்ந்துள்ளன.
ஆனால், இந்த முழக்கத்தை எழுப்பும் அ.இ.அ.தி.மு.க தங்கள் முக்கிய எதிரி தி.மு.க என்று கூறுகிறது. மாநில பாஜக தலைமையை கடுமையாக விமர்சிக்கும் அந்தக் கட்சி பிரதமர் நரேந்திர மோடியையோ, ஒன்றிய அரசின் செயல்பாடுகளையோ விமர்சிக்க தயங்குகிறது. இது அவர்கள் முழக்கத்தை பெரும் அரசியல் குழப்பத்தின் வெளிப்பாடாக மாற்றுகிறது.
அ.இ.அ.தி.மு.க ஏன் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கவில்லை?
அ.இ.அ.தி.மு.க அரசியல் குழப்பத்தின் ஊற்றுக்கண் என்னவென்றால் அது பாஜக-வுடன் உறவை முறித்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் கருத்தியலோ, மாநில உரிமைகளோ அல்ல. பாஜக தன்னை அ.இ.அ.தி.மு.க-வுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் முன்னிறுத்திக் கொள்வதுதான்.
இரண்டு முக்கிய பிரச்சினைகள். ஒன்று, பாஜக தன் தலைமையில் தேர்தல் கூட்டணி அமைய வேண்டும், தனக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என எதிர்பார்ப்பது. இரண்டு, அடுத்து வரும் 2026 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று பேசுவது. இந்த இரண்டுமே அ.இ.அ.தி.மு.க-வின் இடத்தைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சி என்பது தெளிவு.
இதுவரையிலான தேர்தல் முடிவுகளை கணக்கில் கொண்டு பார்த்தால் அ.இ.அ.தி.மு.க பெறக்கூடிய வாக்கு சதவிகிதம் 20% முதல் 25% வரை எனலாம். பாஜக-வின் வாக்கு சதவிகிதம் அதிகபட்சம் 5% எனலாம். ஆனால், பாஜக தான் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட “என் மண், என் மக்கள்” என்ற யாத்திரை தமிழ்நாட்டில் பெரும் ஆதரவு அலைகளை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இப்படி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஒரு பார்வையை ஏற்படுத்தி, காட்சி அரசியல் செய்வது பாஜக-வுக்கு கைவந்த கலை. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் பலியாவது கடினம்.
இப்படி தன் இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பாஜக-வை எதிர்ப்பதில்தானே அ.இ.அ.தி.மு.க கவனம் செலுத்த வேண்டும்? ஆனால், ஆடு உறவு, குட்டி பகை என்பதுபோல பாஜக தேசிய தலைமையை, அதன் கருத்தியலை எதிர்க்காமல் மாநில பாஜக தலைமையை மட்டும் எதிர்த்து காமெடி செய்து வருகிறது அ.இ.அ.தி.மு.க.
தமிழ்நாட்டில் ஏன் பாஜக எதிர்ப்பு வேரூன்றியிருக்கிறது?
இந்திய குடியரசு தோன்றியபோதே உடன் தோன்றிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதற்கு முன்பே முப்பதாண்டுகள் திராவிட அரசியல் சித்தாந்தம் பொதுவெளியில் நீதிக்கட்சி மூலமாகவும், சுயமரியாதை இயக்கம் மூலமாகவும், திராவிடர் கழகமாகவும் வேர்விட்டு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அதை வேர்மட்டத்தில் உருவாக்கிய கட்சி அமைப்புகள் மூலம் முழுமையாகப் பரவி நிலைபெறச் செய்தது.
அந்தக் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்துக்கு காங்கிரஸ் முக்கிய கருத்தியல் எதிரியல்ல. “இந்து, இந்தி, இந்தியா” என்ற வடவராதிக்க, பார்ப்பன -பனியா ஆதிக்கக் கருத்தியலே திராவிட இயக்கத்தின் முக்கிய எதிரி. அதனால்தான் காமராஜருடன் எதிர்ப்பு மட்டுமன்றி, நட்பும் இருப்பது சாத்தியமானது.
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும், தி.மு.க அதை மாநில சுயாட்சிக் கோரிக்கையாக வளர்த்தெடுத்தது. அந்தக் கோரிக்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டியது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்குமான அதிகாரப் பகிர்வில் மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள், உரிமைகள் வேண்டும் என்பதே முக்கியமான கருத்தியல் தளமாகும்.
தி.மு.க-விலிருந்து ஐம்பதாண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர் பிரிந்து அ.இ.அ.தி.மு.க கட்சியினை உருவாக்கினாலும், அவர் அண்ணாவின் பெயரில்தான் அரசியல் நடத்தினார். அதனால் கருத்தியல் ரீதியாக தி.மு.க-விடமிருந்து முற்றிலும் முரண்பட வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால், ஓரளவு இந்திய தேசியத்திற்கு அணுக்கமான ஒரு திராவிட மாற்றாக அ.இ.அ.தி.மு.க-வை வடிவமைத்தார்.
இந்த நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியில்தான் இப்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள வெகுஜன மன நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக தொடர்ந்து தமிழகத்தின் நலனுக்கு எதிராக இருக்கிறது என்பதை பாமர மக்களும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் அம்சங்கள் பல இருக்கின்றன. அவை மிகவும் எளிமையான, உணர்வுபூர்வமான உதாரணங்கள்.
ஒன்று, இந்தியா முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளைக் கட்டி திறந்துவைத்துள்ள பாஜக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினை முந்தைய தேர்தலிலேயே உதயநிதி ஸ்டாலின் செய்த ஒற்றைச் செங்கல் பிரச்சாரத்தில் மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பிறகும் பாஜக பிடிவாதமாக எந்த முயற்சியும் எடுக்க மறுத்துவிட்டது.
சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத பெருமழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு பைசா கூட கொடுக்க மறுத்துவிட்ட து ஒன்றிய அரசு. வேண்டுமென்றே ஆணவமாக மாநில பேரிடர் நிதியைக் கொடுத்துவிட்டோமே, அது போதாதா என்று கேட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பசிக்கு ரொட்டியில்லை என்றால் கேக் சாப்பிடுங்கள் என்று பிரெஞ்சு அரசி கூறியது போலத்தான் இந்தப் பதில் இருக்கிறது. மாநில பேரிடர் நிதி இந்த பெரு வெள்ளத்தின் தாக்கத்தை ஈடு செய்ய போதாது என்பதால்தான் தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் கேட்கிறது தமிழ்நாடு. அந்த தேசிய பேரிடர் நிதியும் மக்கள் தரும் வரிப்பணம்தானே? அமைச்சர் உதயநிதி கேட்டதுபோல அது என்ன அவர்கள் “மதிப்பிற்குரிய தகப்பன்” வீட்டு சொத்தா?
இங்கேதான் தமிழகம் தரும் வரிப்பணம் கொடுத்த பிரச்சினை வருகிறது. இந்தியாவின் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு தரும் வரிப்பணத்தில் ஒன்றிய அரசு நிதிப்பகிர்வாக ஒரு ரூபாய்க்கு இருபத்து மூன்று காசுகள்தான் தருகிறது என்பதும், ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய்க்கு மேல் தருகிறது என்பதும் மீம்ஸ் மூலம் மக்களிடையே தீயாக பரவியுள்ளது.
இதே போலத்தான் நீட் விலக்கு, ஆளுநர் ரவியின் அத்துமீறல்கள் என தொடர்ந்து மாநில உரிமைகளை நசுக்கி வருகிறது பாஜக அரசு என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துள்ளது. எனவே இந்தியாவிலேயே பாஜக எதிர்ப்பில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
அரசியல் முட்டுச் சந்தில் அ.இ.அ.தி.மு.க
அ.இ.அ.தி.மு.க அரசியல் இருப்பின் மூலாதாரம் தி.மு.க எதிர்ப்பு என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்த எதிர்ப்பு காந்தத்தின் ஒத்த முனைகள் விலகுவதுபோல இருக்க வேண்டும். அதாவது திராவிட கருத்தியல், மாநில நலன் வட்டத்தில் தி.மு.க-வின் மாற்று என்றுதான் இந்த போட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப்புற பகுதிகளிலும் இயங்கும் கட்சி நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகளுக்கு எதிர்முனையில் இயங்குவது சாத்தியம்.
இன்று தி.மு.க பாஜக ஒன்றிய அரசு x மாநில நலன் என்று அரசியலை கட்டமைக்கும்போது, தி.மு.க-வுடன் அரசியல் வெளியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க அதே கருத்தியலில் தாங்கள் தி.மு.க-வைவிட தீவிரமாக இருப்பதாகக் கூற வேண்டும். அதுவும் ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான செயல்பாடுகளை கடுமையாகக் கண்டிக்க வேண்டும். அப்போதுதான் தி.மு.க-வுடனான அதன் எதிர்ப்பு ஒரே அரசியல் களத்தின் உள்முரணாக இருக்கும்.
ஆனால், அ.இ.அ.தி.மு.க ஒன்றிய பாஜக அரசை எதிர்க்க தயங்குகிறது. மாநில நலன் சார்ந்து தேசிய அளவில் உருவாகியுள்ள அரசியல் சொல்லாடலை பகிர்ந்துகொள்ள அதனால் இயலவில்லை. ஏனெனில் அது பாஜக-விடம் நாங்கள் உங்கள் வேலையை தமிழ்நாட்டில் செய்கிறோம். தமிழ்நாட்டு வலதுசாரி அரசியலுக்கு ஃபிரான்சைஸ் உரிமையை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்கிறது. பாஜக தர மாட்டேன் என்று கூறுகிறது.
ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பாஜக-வை ஆதரித்ததைக் கூட காலத்தின் கட்டாயம், ஓபிஎஸ் மூலமாகக் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்று கூறலாம். ஆனால், அதெல்லாம் முடிந்து கடந்த ஆண்டு இந்தியா கூட்டணி அமைந்தபிறகு, என்.டி.ஏ கூட்டணியின் ஒன்றுகூடலில் எடப்பாடி பெருமையுடன் கலந்துகொண்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
எடப்பாடியிடம் “ஆரிய, திராவிட முரண்பாடு” குறித்து கேட்டால், வரலாற்று ஆய்வாளர்களைத்தான் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். கட்சி பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துக்கொண்டு இப்படிப் பொறுப்பின்றி பதில் சொன்னால் மக்கள் என்ன நினைப்பார்கள்? குறைந்தபட்சம் “எங்கள் கட்சி திராவிடர் நலனை ஒருபோதும் கைவிடாது” என்று பொதுப்படையாகக் கூறலாமே? திராவிடம் என்ற வார்த்தையைச் சொல்லவே அச்சமா?
அது மட்டுமல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில அரசியலை குழி தோண்டி புதைப்பது என்பதை உணராமல் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார் பழனிசாமி. ஆளுநர் ரவி சட்டமன்றத்தை அவமதித்தால் அது அரசுக்கும், ஆளுநருக்கும் உள்ள பிரச்சினை என்று விலகிக் கொள்கிறார்.
எடப்பாடிக்கு இந்தச் சூழ்நிலையின் சிக்கல் சுத்தமாகப் புரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு என்பதுதான் பெரிய கேக் துண்டு. நிச்சயம் 90% வாக்குகள். அதை பகிர்ந்துகொள்வதில்தான் அவர் தி.மு.க-வுடன் போட்டியிட வேண்டும். அதுதான் உண்மையான தி.மு.க எதிர்ப்பு அரசியல்.
அதற்கு பதிலாக அவர் தமிழ்நாட்டில் வலிமையான தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்பு என்ற சிறிய கேக் துண்டை பகிர்ந்துகொள்ள பாஜக-வுடன் போட்டியிட நினைக்கிறார். எப்படியாவது பாஜகவைவிட வலுவான கட்சி என்று காட்டிவிட்டால் பாஜக தன்னுடன் சமரசம் செய்துகொள்ளும் என்று நம்புகிறாரோ என்னவோ. தமிழ்நாட்டில் பாஜக ஏஜென்ட்டாக இருந்தாலும் அரசியல் எதிர்காலம் அதோகதிதான்.
எப்படியானாலும் பாஜக எதிர்ப்பினை முன்னெடுக்காவிட்டால், எடப்பாடி அரும்பாடுபட்டு கைப்பற்றிய இரட்டை இலை சின்னத்துக்கு நாளடைவில் பெரும் பலவீனமே ஏற்படும். அவர் அஞ்சுகிறாரா, அரசியல் தெரியாமல் குழம்புகிறாரா என்பது பிரச்சினையில்லை. அரசியல் எதிர்காலம்தான் பிரச்சினை.
இன்றைய நிலையில் அவருடைய தேர்தல் முழக்கம் “தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!” என்பதன் ஒரே பொருள் ஒன்றிய பாஜக அரசினையும், அந்தக் கட்சியின் கருத்தியலையும் எதிர்ப்பதாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் அது பொருளற்ற வெற்று முழக்கமாகவே முடியும். அரசியல் முட்டுச்சந்தில் அ.இ.அ.தி.மு.க-வை நிற்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு
பாஜக கூட்டணியில் தமாகா: அறிவிக்கத் தயாராகும் ஜி.கே.வாசன்
IND vs ENG: புதிய சாதனைகளை அடித்து நொறுக்கிய அஸ்வின், ரோகித் சர்மா
தம்பி குற!
நீ என்னத்த முக்கினாலும் தேசிய பீவர் தமிழகத்தை தொட்டு விட்டது உண்மை..இனியும் தமிழகம் மாற்று பாதையை தேடாது..
அண்ணாமலை ஜுரம் உனக்கும் தொற்றி விட்டதை கண்டு மனதால் ஆனந்தமே..
😄😄😄😄😄