டிஜிட்டல் திண்ணை: லெட்டர், கடிதம், கடுதாசி… எடப்பாடி- பன்னீரை டெல்லி பந்தாடும் பின்னணி!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட கடித நகல் வந்து விழுந்தது.

அதைப் படித்து ஒரு ஸ்மைலியை முன்னோட்டமாக அனுப்பிவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“அதிமுகவில் பன்னீருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நடக்கும் இரட்டை தலைமை யுத்தத்தில் முக்கியமான கட்டமாக டிசம்பர் 29ஆம் தேதி அமைந்துவிட்டது. கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் அவரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததோடு பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்தும் நீக்கினார்கள்.

இந்தப் பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில்…  அதிமுகவின் தலைமை யார் என்று பாஜக யாரை அங்கீகரிக்கிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில்  தொடர்ந்து இருந்து வருகிறது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில் டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு அழைத்திருந்தனர். இது பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எடப்பாடியை விட பாஜக தலைமையிடம் நெருக்கமாக இருப்பது, தானே என்ற தோற்றத்தை பன்னீர் ஏற்படுத்தி வைத்திருந்த நிலையில் இந்த கடிதம் அவருக்கு அதிர்ச்சியையும் அளித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு பன்னீர்செல்வம் ஒரு கடிதத்தையும் எழுதினார்.

இதன் பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய கருத்து கேட்பு கடிதம் மத்திய சட்ட ஆணையத்தின் சார்பில் அதிமுகவுக்கு அனுப்பப்பட்டபோது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று போட்டு அனுப்பி இருந்தார்கள். இது பன்னீர்செல்வத்தை மேலும் காயப்படுத்தியது.

இந்த முறையும் உடனடியாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில்,  ’தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்காத பதவியை எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்களாகவே கொடுத்து கடிதம் எழுதுவது தவறானது.

அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் பன்னீர்செல்வம். அவரோடு இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் இப்போது தேர்தல் ஆணைய பதிவுகளில் உள்ளது.

இந்த நிலையில் சட்ட ஆணையத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி என்று அழைப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. மேலும் அவர் அந்த கடிதத்தில்,  ’எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ராஜினாமா செய்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.

எனவே இப்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பதவியும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.  பன்னீர்செல்வம் இதை தனது டெல்லி பாஜக நண்பர்களைத் தொடர்புகொண்டு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.

aiadmk duel leadership election commission letter digital thinnai

இந்த நிலையில் தான் டிசம்பர் 29ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்து ஓட்டளிக்கும் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில்… ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை குறிப்பிட்டு  அனுப்பியுள்ளார். இதை பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறார்கள். பன்னீர் பொதுக்குழுவை கூட்டுவதற்கான வாய்ப்பு வலிமைப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

’டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்களில் தம்பிதுரை மூலம் செல்வாக்கு செலுத்தி  எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுச் செயலாளர் என்று கேட்டு கடிதம் வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி’ என்கிறார்கள் பன்னீர் தரப்பினர். மேலும் ஒரு  ட்விட்ஸ்டாக,  ’ரிமோட் வோட்டிங் தொடர்பான செயல் விளக்க கூட்டத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் இப்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தான் செல்வார்கள்.

ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகி விட்டார். எனவே அவருக்கு இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை’ என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்.

எடப்பாடி தரப்பில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை என்கிறார். ஆனால் பாஜக அதிமுக கூட்டணி அமைய வேண்டுமானால் எடப்பாடியை தன் வழிக்குக்  கொண்டு வருவதற்கு தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு பயன்படுத்தக்கூடும் என்றும் அதற்கான காய் நகர்த்தல்கள்தான் இந்த கடிதங்கள் என்றும் சொல்கிறார்கள் டெல்லியில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செங்கல்பட்டில் தாவரவியல் பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு!

குடிநீர் தொட்டியில் மலம்: தனிப்படை அமைப்பு!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *