கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மறைத்து, அதிமுக திசைதிருப்பல் நாடகம் நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஜூன் 29) நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.
அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும்.
அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள். இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத்தான் அ.தி.மு.க. தயாராக இல்லை.
ஒருபுறம் தேர்தல் தோல்வி; மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அ.தி.மு.க. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும்.
கள்ளக்குறிச்சி : நடவடிக்கைகள் என்ன?
கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய – உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன்.
சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன். அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது. இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்.
ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான்!
எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? “சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே” என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார்.
மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான்.
சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம்.
ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsSA : தோனி மாதிரி கோலிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு இருக்கு!
”விக்கிரவாண்டியில் பணம் வெல்லாது” : டாக்டர் ராமதாஸ்