கூட்டணியை நம்பி அதிமுக இல்லை, அதேநேரம் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “2014 மக்களவை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக.
3 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதனால், தற்போது அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதனடிப்படையிலேயே, 16 பேர் கொண்ட முதற்கட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்றவர்,
“தேமுதிகவிற்கு தற்போது 5 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும். மக்களவைத் தேர்தலின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணியில் இணைவதற்காக யார் வந்தாலும் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்துவிட்ட நிலையில், தேமுதிகவை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும் பாஜகவும் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த பின்னணியில்தான் தேமுதிகவுக்கு 5 சீட்டுகள் என்று அறிவித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் பலம் என்ன? வாக்கு சதவிகிதம் சொல்லும் டேட்டா ரிப்போர்ட்!
GOLD RATE: மீண்டும், மீண்டும் உயரும் தங்கம்… இதுக்கு ஒரு எண்டு இல்லையா?