’மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று பேசிய தமிழக பாஜக மூத்த நிர்வாகி ராம.சீனிவாசன் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 31) ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம்தமிழர் என நால்முனை போட்டியை சந்தித்துள்ள மதுரை தொகுதியில் பிரச்சார அனல் கொஞ்சம் அதிகமாகவே அடிக்கிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக கூட்டணியின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் சரவணன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவி ஆகியோருடன் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்.
தற்போது பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வரும் அவர், திமுக மட்டுமின்றி அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதிமுக என்ற கட்சியே இருக்காது!
சமீபத்தில் சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு எந்த தேர்தலில் அதிமுக ஒன்றரை கோடி ஓட்டுகளை வாங்கி உள்ளது? இந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்ட அந்தக் கட்சி பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்” எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், இன்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ராம சீனிவாசன் கருத்துக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக வரலாறு உனக்கு தெரியுமா?
அவர் பேசுகையில், “மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் அக்கட்சி வேட்பாளராகவும் இருக்கும் ராம சீனிவாசன் என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக என்னைப் பற்றிப் பேசியுள்ளார்.
இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகுமாம். ஏய். உன்னைப் போல எத்தனை பேரை பார்த்தது அதிமுக. அதிமுக வரலாறு உனக்கு தெரியுமா?
நான் உட்பட இந்த மேடையில் இருப்பவர்கள் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உன்னைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் நாங்கள். மக்களுக்கு சேவை செய்து அரசியல் செய்கின்றோம். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி என்றால் அதிமுக தான்.
தாமரையை அடையாளம் காட்டியதே அதிமுக தான்!
எங்களை பார்த்து 2024ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொல்கிறாய். பொறுத்திருந்து பார், இந்த தேர்தலோடு பெட்டி அரசியல் செய்து கொண்டிருக்கு உங்களை போன்றவர்கள் அடையாளம் இன்றி போய்விடுவீர்கள். அது தான் எதார்த்த உண்மை.
1998ல் பாஜகவை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான். பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியது அதிமுக தான். உங்களுக்கே அடையாளம் காட்டியது அதிமுக தான். இப்போ எங்களைப் பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற?” என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
GOAT: பெரும் தொகைக்கு விலைபோன சாட்டிலைட் உரிமை… யாரு வாங்கிருக்காங்கன்னு பாருங்க!
”தோல்வி பயத்தில் சர்வாதிகாரத்தை மோடி கட்டவிழ்த்துள்ளார்” : ஸ்டாலின்