நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (மார்ச் 10) நேர்காணல் துவங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் 10, சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 1, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கியுள்ளது.
இந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை நடைபெற்றது. 2,924 பேர் விருப்பமனு அளித்திருந்தனர்.
இந்தநிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தற்போது நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்டோர் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக நேர்காணல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை அதிமுக இன்னும் நிறைவு செய்யவில்லை.
தொடர்ந்து பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி துவங்கி மார்ச் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுவதற்காக 2,475 பேர் விருப்பமனு அளித்திருந்தனர்.
இந்தநிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, உள்ளிட்ட தொகுதிகளுக்கு காலையில் நேர்காணல் நடைபெறுகிறது. ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களுக்கு மதியம் நேர்காணல் நடைபெறுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Miss World 2024: தவறவிட்ட இந்தியாவின் சினி செட்டி.. வென்றது யார்?