செப்டம்பர் 25ஆம் தேதி மாலை கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று அந்த கட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
ஏற்கனவே செப்டம்பர் 18ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக அறிவிக்கப்பட்டு… செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் அந்த அறிவிப்பு உறுதி செய்யப்பட்டு அடுத்ததாக இந்தக் கூட்டத்தில் அதற்கான அதிகாரபூர்வ எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
செப்டம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்… நேற்று பகல் 2:00 மணி முதல் அதிமுக தலைமை கழகத்திற்கு மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வர தொடங்கினார்கள்.
அவர்களோடு சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களும் தலைமை அலுவலக வளாகத்தில் குவியத் தொடங்கினார்கள்.
மூன்று மணி அளவில் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி அலுவலகத்துக்கு வந்தார். அவரது கையில் தான் அந்த தீர்மான நகல் இருந்தது.
சரியாக மாலை 4.12 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தது. தொண்டர்களின் உற்சாகமான வரவேற்புக்கிடையே எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தலைமை கழகத்தில் இருக்கிற கூட்ட அரங்குக்கு வந்த போது மணி 4.30. அப்போது தான் கூட்டம் தொடங்கியது.
அதிமுகவின் அவை தலைவரான தமிழ் மகன் உசேன் கூட்டத்தை தொடக்கி வைத்து, ‘இந்த கூட்டம் எதற்காக கூட்டப்பட்டிருக்கு என்பது உங்களுக்கு தெரியும். அம்மாவைப் பற்றி அவதூறாக பேசினார்கள்… பிறகு அண்ணாவைப் பற்றி பேசினார்கள்… இப்போது நமது அண்ணனைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டார்கள். இனியும் நாம் ஒரு முடிவு எடுக்காமல் இருக்க முடியாது.
அதிமுகவின் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் அண்ணன் பொதுச்செயலாளர் இடம் கொடுப்பது என்று இந்த கூட்டம் முடிவு செய்கிறது’ என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேசினார். அவரது பேச்சை ஜெயக்குமார் வழிமொழிந்தார்.
அதன்பிறகு மேடையில் இருந்த தலைமைக் கழக நிர்வாகிகளிடம் சில நிமிடங்கள் ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி… மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒலிபெருக்கியை கொடுத்து “பாஜக கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று சொல்லுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு, காமராஜ், கே சி வீரமணி தொடங்கி கடைசி வரிசையில் மாவட்ட செயலாளர்கள் வரை அனைவரும் ஒலிபெருக்கியை வாங்கி ‘பாஜக கூட்டணி வேண்டாம்… பாஜக கூட்டணி தேவையில்லை… இப்போது மட்டுமல்ல எப்போதும் வேண்டாம்…’ என்றெல்லாம் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இதன் பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த முக்கியமான ஒற்றை தீர்மானத்தை எழுந்து நின்று வாசித்தார்.
அவர் ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது’ என்று சொன்னபோது மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி அதை வரவேற்றனர்.
வெளியே அதிமுக தலைமை கழக வளாகத்தில் நின்றிருந்த தொண்டர்களும் மற்ற நிர்வாகிகளும் இந்த கைத்தட்டல் ஒலியை கேட்டு உற்சாகமடைந்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதை அவர்கள் இந்த கைத்தட்டல் ஓசை மூலம் புரிந்து கொண்டனர்.
இந்நிலையில் தீர்மானம் வாசிக்கப்பட்ட பிறகு தனது செல்போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு செல்ல முயன்ற எடப்பாடி பழனிசாமி..
பிறகு என்ன நினைத்தாரோ திடீரென செல்போனை வைத்துவிட்டு உள்ளே சென்று சில நிமிடங்களில் ரெப்ரஷ் ஆகி வந்தார்.
உடனடியாக அவருக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்கள்.
கேபி முனுசாமியிடம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி… ‘உடனடியாக தீர்மானத்தை பத்திரிகையாளர்களிடம் கொடுத்து வாசித்து விடுங்கள்’ என்று கூறி அனுப்பினார்.
சரியாக 5.10 மணிக்கு எல்லாம் வெளியே வந்த கேபி முனுசாமி பட்டாசு சத்தங்களுக்கு இடையே அந்த ஒற்றை தீர்மானத்தை வாசித்தார்.
அதன் பிறகு மாலை 7 மணி வரை தனது அறையிலேயே இருந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக நிர்வாகிகளோடு சிறிது நேரம் ஆலோசித்தார்.
அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது என்ற இந்த முடிவுக்கு என்னென்ன ரியாக்ஷன்கள் வந்து கொண்டு இருந்தன என்பதை காத்திருந்து அறிந்து கொண்டு அதன் பிறகு ஏழு மணிக்கு தலைமை கழக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
வேந்தன், வணங்காமுடி
90,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா: என்ன காரணம்?