மார்ச் 9 ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 9 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
இந்த தோல்விக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தலில் தான்.
இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.
‘இரட்டை இலை’ சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்தபட்சம் டெபாசிட் ஆவது பெற முடிந்தது என்பதுதான் இத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு ஆறுதலான விஷயம்.
எடப்பாடி எப்போது முதலமைச்சராக பொறுப்பேற்றாரோ, அப்போது முதல் நடந்த தேர்தல்களில் எல்லாம் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை இழந்தோம். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றியை இழந்தோம். இப்போது கட்சியை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது” என்று பேட்டியளித்திருந்தார்.
”அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். திமுக கூட்டணி படு மோசமாகத் தோல்வியைத் தழுவி இருக்கும்.
ஒருங்கிணைந்த அதிமுகவை அமைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடித்து, மாபெரும் வெற்றியை நமது இரு பெரும் தலைவர்களுக்கும் சமர்ப்பிப்போம்” என்று சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதே செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் வெற்றி பெற்று விடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதுமட்டுமின்றி அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக ஒன்று சேராததே தோல்விக்குக் காரணம் என்று விமர்சித்திருந்தார்.
இடைத்தேர்தலில் சந்தித்த தோல்வியால் இப்படிப் பல விமர்சனங்களைப் பெற்று வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவிற்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்நிலையில் தான் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மோனிஷா
உதவியாளர் கைது: ராஜேந்திர பாலாஜி போல விஜயபாஸ்கருக்கும் குறி?
வதந்தி பரப்பும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள்: முதல்வர் கண்டனம்!