விரைவில் அதிமுக மாநாடு!

Published On:

| By Monisha

aiadmk conference will held soon

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில் எதிர்கட்சியான அதிமுக தனது பலத்தை நிரூபிக்க மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதை அக்கட்சியின் மதுரை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஜனவரி1) தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

aiadmk conference will held soon

அப்போது, “உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.
அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர்.

2022-ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது” என்றவர் தொடர்ந்து பேசும்போது,

“அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமான ஆண்டாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். தனி மனிதர், தனிக் குடும்பம் என்று இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்குச் சாட்சியாக அதிமுக செயல்படுகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்” என்று கூறினார் செல்லூர் ராஜூ.

மேலும் அவர், “திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் சிலிண்டர் மானியம் மாதம் 100 எனக் கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு 22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை.

இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டத்திற்குப் பயந்து தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது.

33 ரூபாய்க்கு எத்தனை அடிக் கரும்பு கொள்முதல் செய்து. எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் எனத் தெரியவில்லை. எத்தனை அடிக் கரும்பு வழங்கப்படுகிறது எனக் கடையில் எழுதி வைக்க வேண்டும்.

திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்குப் பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது” என்று பேசினார் செல்லூர் ராஜூ.

மோனிஷா

18,700-க்கு ராயல் என்ஃபீல்டு பைக்: வைரலாகும் பில்!

2023 புத்தாண்டு: கலைஞர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share