கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டம் பணத்துக்காக கூடியது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 31) அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம், சக்ரவர்த்தி, நாராயணன் திருப்பதி, சுதாகர் ரெட்டி, வி.பி.துரைசாமி, கனகசபாபதி, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
200 ரூபாய் சிலிண்டர் விலையை குறைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், சந்திரயான் 3 திட்ட வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூன்றாவது தீர்மானமாக, வரும் செப்டம்பர் 4ஆம் தேதி தென்காசியில் தொடங்கி 29ஆம் தேதி கோவையில் முடிக்கும் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட பாத யாத்திரைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் “வெளியூர் போறேன்… விமானத்துக்கு நேரமாச்சு” என்று பேசத் தொடங்கிய அண்ணாமலை,
“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6,7 மாதங்கள் தான் இருக்கின்றன. இதுவரை நாம் திமுகவினர் மீது குற்றச்சாட்டு சொல்லி வந்தோம். அவர்கள் டிஃபென்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவர்கள் பதில் சொல்லி வந்தார்கள். இப்போது அவர்கள் அஃபென்ஸுக்கு வந்துவிட்டார்கள்.
கடந்த ஒரு வாரமாக அவர்கள் நம் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். நாம் டிஃபென்ஸ் விளையாட வேண்டிய நிலை உள்ளது. சிஏஜி அறிக்கை ஆகியவற்றுக்கு நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
இனிமேல் திமுக தலைமையையும், அமைச்சர்களையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் உள்ளூரில் இருக்கக் கூடிய திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளூர் சேர்மேன், கவுன்சிலர்கள், திமுக பிரமுகர்கள் என இவர்கள் செய்த தவறுகளை கண்டிபிடித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்புங்கள். அந்த புகாரை மீடியாவுக்கும் கொடுங்கள்” என்று நிர்வாகிகளிடம் கூறினார் அண்ணாமலை.
தொடர்ந்து அவரது பேச்சு அதிமுக பக்கம் திரும்பியது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டை குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, “அதிமுக மாநாடு பிரம்மாண்டம் இல்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதையேதான் இப்போதும் சொல்கிறேன். இந்த மாநாட்டுக்கு வந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். அதிமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை” என்று அதிமுகவை தாக்கி பேசினார்.
“இருந்தாலும் இந்த தேர்தல் என்பது நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி” என்று தெரிவித்த அண்ணாமலை, “இந்த தேர்தலில் இருக்கிற கட்சிகளோடு நாம் அட்ஜெஸ்ட் செய்துதான் போக வேண்டும். நீங்கள் எல்லாம் பெரிதாக கூட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்க வேண்டாம். சின்ன சின்னதாக மீட்டிங் நடத்துங்கள். சோஷியல் மீடியாவை முழுக்க பயன்படுத்துகள் ” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து என் மண், என் மக்கள் நடைபயணத்தை பற்றி பேசிய அண்ணாமலை, இந்த யாத்திரை கட்சிக்கு ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடியின் திட்டத்தால் பலன் அடைந்தவர்கள், தாங்களாகவே, நாங்கள் மோடிஜியின் ஸ்கீமில் பலன் அடைந்திருக்கிறோம் என்று என்னிடம் வந்து சொல்கிறார்கள்.
படித்த இளைஞர்கள் திராவிடம் என்றாலே எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஏனென்று கேட்டால். “நாங்கள் படித்தது இன்ஜினியரிங், ஆனால் ஸ்விக்கி, ஊபர் போன்ற நிறுவனங்களில் வேலை செய்கிறோம்” என்று அதிருப்தியுடன் கூறுகிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அமைத்த கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 13 சதவிகிதம் தான்.
இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த வாக்கு வித்தியாசத்தை குறைப்பதோடு… எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் கடின உழைப்பை போட வேண்டும்” என்று பேசியுள்ளார் அண்ணாமலை.
இந்த கூட்டத்தில் அதிமுகவை அண்ணாமலை தாக்கி பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரியா
உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்!