அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட பின் வீடு திரும்பும்போது உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சார்பில் நேற்று மதுரையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடு குறித்து இன்று (ஆகஸ்ட் 21) அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும். தமிழ் நாட்டு மக்களின் துயர் விரைவில் தீரும் என்ற அறைகூவலை நம் மாநாட்டின் வெற்றி உறுதிப்படுத்தி இருக்கிறது.
மதுரை மண்ணில் லட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அதிமுக கொடி அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் பல நூறு ஆண்டு காலம் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் என்கின்ற உறுதியை பறைசாற்றி இருக்கிறது.
கழகத்தின் மூன்றாம் தலைமுறை எழுச்சியைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிற தீய சக்திகளின் கூட்டம், காவல் துறையை வைத்து, மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு துயரங்களைத் தந்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பி அட்டூழியம் செய்தனர்.
“கட்டற்றுப் பாய்கிற காவிரி வெள்ளத்தை சிட்டுக் குருவிகள் கூடி தடுக்கவா முடியும்” மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்கள், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் ஆங்காங்கே காத்திருந்தும், 30 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தும், மகளிர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதைக் கண்டு எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.
திமுக அரசின் காவல் துறையான ஏவல் துறை, மாநாட்டிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. மாறாக, மாநாட்டிற்கு வருபவர்களை தடுக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அதேபோல், துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் தாண்டி, தொண்டர்கள் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டது நமக்குக் கிடைத்திட்ட மாபெரும் வெற்றி.
இந்த வரலாற்று வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும்; அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
“தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்” என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்கும் வகையில், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் நம் இயக்கம் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? இந்திய அரசியல் வரலாற்றில் இன்னொரு கட்சி இப்படியொரு மாநாட்டை நடத்தியது உண்டா? என நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.
மாநாட்டில் வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று இந்த மாநாட்டுக்கு வந்து சென்ற 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
“மாநாட்டுக்கு வந்து சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் அதிமுக சார்பில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!
கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!