டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவிடம் அதிமுக புகார்- அண்ணாமலையை இயக்குவது யார்?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், ‘ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்த புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“அதிமுகவின் மூத்த எம்பி தம்பிதுரை இன்று (ஏப்ரல் 5) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி இருக்கிறது என்று அமித் ஷாவே சொல்லிய பிறகும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வரும் தொடர் கருத்துகளால் அதிமுக தலைவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் அமித் ஷா நியூஸ் 18 நெட்வொர்க் நடத்திய கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ்நாட்டில் இப்போது இருக்கிற கூட்டணி தொடர்கிறது என்று பதில் அளித்தார். அதை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ‘அமித் ஷாவே கூறிவிட்டார். கூட்டணி தொடர்கிறது’ என்று உறுதிப்படுத்தினார்.

ஆனால் அதன் பின் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கூட்டணி என்று எதையும் அமித்ஷா இறுதி செய்யவில்லை. நீங்களாகவே அப்படி சொல்கிறீர்கள். கூட்டணி பற்றி சொல்வதெல்லாம் கல்லில் எழுதி வைத்ததல்ல. தண்ணீரில் எழுதி வைத்தது’ என்று கூறினார்.

மேலும், ‘அமித் ஷா சொன்னதை சரியாக புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறினார் அண்ணாமலை.

அதேநாளில் நன்றாக இந்தி அறிந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ’அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார், கூட்டணி வலுவாக இருக்கிறது’ என்று கூறினார்.

அண்ணாமலைக்கு பதிலடியாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தேசிய கட்சிகளில் கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் பேசுவார்கள். மாநிலத் தலைமை அல்ல’ என்று அழுத்திச் சொன்னார்.

மேலும் இன்று (ஏப்ரல் 5) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘ கூட்டணி பற்றி அமித் ஷா சொல்லிவிட்ட பிறகு, மாநிலத் தலைவரின் கருத்தை எல்லாம் நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கூறினார்.
இந்த பின்னணியில்தான் அமித் ஷாவை இன்று அதிமுகவின் மூத்த எம்பி தம்பிதுரை சந்தித்துப் பேசியுள்ளார். ஏற்கனவே அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 5) அமித் ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார் தம்பிதுரை.

அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது, ‘கூட்டணி தொடரும் என்று நீங்களே (அமித் ஷா) சொல்லிவிட்ட நிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வரும் கருத்துகளால் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் சோர்வை உருவாக்கும். இதுகுறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்” என்று தம்பிதுரை அமித் ஷாவிடம் கூறியிருக்கிறார்” என்கிறார்கள்.

அமித் ஷா கூட்டணி பற்றி ஒரு கருத்தை சொல்லியும் அண்ணாமலை அதை விவாதமாக்குகிறார் என்றால், அவரது தைரியத்துக்கு பின்னணி ஆர்.எஸ்.எஸ்.,தான் என்கிறார்கள்.

‘ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆட்சியா கட்சியா என்றால் கட்சிதான் என்ற பக்கமே சிந்திக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலேயே சிலர் ஆட்சி இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். அதேநேரம் இந்த இலக்கணம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வரும் எம்பி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 5 இடங்களோ அதிகபட்சமாக 10 இடங்களோ கிடைத்தால் கூட அதற்குள்தான் பாஜக பயணப்பட வேண்டியிருக்கும். ஆனால் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் தமிழ்நாடு முழுதும் கட்சியை வளர்க்க முடியும்,. கொண்டு சேர்க்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து எம்பி தேவையா கட்சி வளர வேண்டுமா என்று கேட்டால் எம்பிக்களை விட கட்சி வளரவேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ், விரும்புகிறது.

இதை உணர்ந்துதான் அண்ணாமலை ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றுவது மாதிரி இருக்கும். தன்னையும் வளர்த்துக் கொண்டது மாதிரி இருக்கும் என்று இரட்டைக் கணக்கு போடுகிறார். அண்ணாமலைக்கு பின்னால் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் சந்தோஷ் பக்க பலமாக இருக்கிறார்.

அதனால்தான் அமித் ஷா கூட்டணி தொடரும் என்று சொன்ன பிறகும் கூட,. அண்ணாமலை அது இறுதியானது அல்ல, கல்லில் எழுதியது அல்ல, தண்ணீரில் எழுதியது என்றெல்லாம் அந்த விவாதத்தை நீட்டித்து விடுகிறார் என்கிறார்கள். இந்த பின்னணியில்தான் அமித் ஷாவை சந்தித்துள்ளார் தம்பிதுரை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு: நடந்தது என்ன?

டெல்டா நிலக்கரி சுரங்கம் : டெல்லியில் அண்ணாமலை

AIADMK complains to Amit Shah about Annamalai
+1
1
+1
5
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *