சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், இன்று (செப்டம்பர் 6) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த செப்டம்பர் 1ம் தேதி, தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், ”ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம்” எனக் கூறப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ‘ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும்’ என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இரு நீதிபதி அமர்வு தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், இன்று (செப்டம்பர் 6) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி உள்ளது.
தற்போது செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுக்கள் விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜெ.பிரகாஷ்