அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 21) உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தனி நீதிபதி தீர்ப்பு:
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ’கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ’தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும்’ என்று தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்துவும் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனுத்தாக்கல் செய்தனர்.

தேர்தலுக்கு அவசரம் ஏன்?
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் செப்டம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ’இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர். அதனையடுத்து அவர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ’தொண்டர்கள் விருப்பம், கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது.
இன்று மீண்டும் விசாரணை:
அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை அவர் மீறியுள்ளார்.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர்செல்வம்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு இன்று (நவம்பர் 21) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஜெ.பிரகாஷ்
குக்கர் குண்டு வெடிப்பு: நாகர்கோவில் இளைஞரிடம் விசாரணை!
முதல்வரை விமர்சித்த வழக்கு: கிஷோர் கே.சாமி கைது!