அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி – பன்னீர் காரசார வாதம் – முழு விவரம்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் கடந்த 2 நாட்களாக உயர் நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்த நிலையில் தீர்ப்பு யாருக்கு சாதமாக வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் வாதம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை 2-வது நாளாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஆகஸ்ட் 11) நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த விசாரணையில் ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து, ஈபிஎஸ் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், ஸ்ரீராம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் தரப்பில் விஜய நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் நர்மதா சம்பத் ஆகியோர் வாதாடினர்.

alt="AIADMK case full details"
நீதிபதி ஜெயச்சந்திரன்

ஈபிஎஸ் தரப்பு – விஜய் நாராயண்

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகக் கூறினார். அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

 மேலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் ஜூலை 1அன்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக விஜய் நாராயண் குறிப்பிட்டார். பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.

நீதிபதி கேள்வி

alt="AIADMK case full details"

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி காலாவதியானது என்று கேள்வி எழுப்பினார்.

பொதுக்குழு ஒப்புதல் இல்லை

alt="AIADMK case full details"

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், 2021 டிசம்பர் 1 செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும் என்றார்.

 தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும் கூறினார். இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் மட்டுமே விதிகள் திருத்தப்பட்டதாகவும்,  பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜுன் 23 பொதுக்குழுவிலேயே, ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டதால், முன்கூட்டி நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை

alt="AIADMK case full details"

பொதுக்குழு உறுப்பினர்களில் 2432 பேர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளதாகக் கூறிய விஜய் நாராயணன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின், கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறி தன் வாதங்களை நிறைவு செய்தார்.

எஸ்.ஆர்.ராஜகோபால் வாதம்

அதன்பின்னர் ஈ.பி.எஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி,  எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுவிட்டு, பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் கூறினார்.

alt="AIADMK case full details"

கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியமில்லை என்றும் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் தெரிவித்தார்.

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்கக்கூடாது

கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும் . அதுபோன்று அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் நடத்தையை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் குறுக்கிட்டு, வழக்குக்கு சம்பந்தமில்லாத அந்த விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு  அறிவுறுத்தினார்.

அதிமுக கட்சி – நர்மதா சம்பத் வாதம்

பின்னர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஓபிஎஸ் தரப்பு – குரு கிருஷ்ணகுமார் வாதம்

alt="AIADMK case full details"

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும்  கேள்விக்கே இடமில்லை என்றார். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான் என்றும், ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது என்றும், முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும்,  அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

எடப்பாடிக்கு ஆதரவா?

alt="AIADMK case full details"

அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா என கேள்வி எழுப்பியபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கட்சி நலனுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் மனுதாரராக  இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர் பதவியின் அடிப்படையில் எதிர்மனுதாரர்களில் ஒருவராக  குறிப்பிட வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு – அரவிந்த் பாண்டியன் வாதம்

பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல . இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்ததாகவும், ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக  இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்துள்ளதாகவும் கூறினார்.

வைரமுத்து தரப்பு – ஸ்ரீராம் வாதம்

வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் பிளாஷ் செய்வதை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 ல் நடந்த பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என தெரிவித்தார்.

alt="AIADMK case full details"

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

கலை.ரா

எடப்பாடி தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.