எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு!

Published On:

| By Prakash

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பளித்த நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று (ஆகஸ்ட் 18) மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் மனுவில், ”ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும்,

பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், ”தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க வேண்டும்” எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு இணைய அழைப்பு விடுத்தார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி இணைய மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த கேவியட் மனுவும், எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவுடன் இணைத்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மனுக்களும் ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றன. ஆகஸ்ட் 22ம் தேதி எடப்பாடியின் மனு ஏற்கப்படும் பட்சத்தில், அந்த மேல்முறையீட்டு வழக்கு அடுத்த ஓரிரு நாட்களில் பட்டியலிடப்படும்.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகே நீதிபதி இந்த வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.

ஜெ.பிரகாஷ்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel