ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரையை இன்று (பிப்ரவரி 7) தொடங்கியுள்ளது அதிமுக.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காகப் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த நிலைப்பாடு உறுதியாகாமல் இருந்து வந்தது.
எடப்பாடி வேட்பாளரா, பன்னீர்செல்வம் வேட்பாளரா என்ற போட்டியும் நிலவி வந்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒப்புதல் படிவத்தை,
நேற்று (பிப்ரவரி 6) மாலை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்.
இதனிடையே பன்னீர்செல்வம் தரப்பினர் தமிழ் மகன் உசேன் அனுப்பி வைத்த ஒப்புதல் கடிதத்தை நிராகரித்திருந்தனர்.
மேலும், பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் இடைத்தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இரட்டை இலை முடக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இரட்டை இலை சின்னத்தில் யார் வேட்பாளாராக போட்டியிட்டாலும் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 7) பகல் 12 மணிக்கு தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுவரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது யார் என்று குழப்பத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளர் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலேயே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் இருந்து வேட்பாளர் தென்னரசு உட்பட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் மற்றும் அதிமுகவினர் இணைந்து அப்பகுதியில் இருந்த ஒரு கோவிலில் சாமி வழிபாடு செய்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேளதாளத்துடன் பிரச்சாரத்தைத் தொடங்கிய தென்னரசுவிற்கு அப்பகுதி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கட்சிக் கொடியோடு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மோனிஷா
சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி: முதல்வருக்கு வைகோ கடிதம் – இன்று விசாரணை!
இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!