முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மே 12 ஆம் தேதி, 69 ஆவது பிறந்தநாள். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் இன்று காலை எடப்பாடியின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, சேலம் நோக்கிப் புறப்பட்டனர்.
பிறந்தநாளை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமி கொண்டாடப் போகிறார் என்ற தகவலை எடப்பாடியின் வலதுகரமும் சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் மே 11 ஆம் தேதியே அதிமுக மாசெக்களுக்கு தெரிவித்துவிட்டார். ‘அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடிவிட்டு சேலம் வரலாம்’ என்றும் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.
மே 12 காலை 7 மணி முதலே எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டை நோக்கி அணி அணியாக அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் படையெடுத்தனர். சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டனர்.
சேலம் புறநகர் மாவட்டம் சார்பாக 69 கிலோ எடை கொண்ட கேக் ஏற்பாடு செய்திருந்தனர். சேலம் மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் தனித்தனியாக பிரமாண்டமான கேக்கினை ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து அனைத்து கேக்குகளையும் ஒன்றாக இருபது அடி நீளத்திற்கு வைத்து மொத்தமாக 200 கிலோ கேக்கினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கேபி.முனுசாமி, பெஞ்சமின், உள்ளிட்டோர் வருகை தந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது மட்டுமில்லாமல் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் திரண்டனர்.
தன் வீட்டு ரிசப்ஷனிலேயே அங்கேயே நின்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். லோக்கல் நிர்வாகிகள் வெளி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரை பெயர் சொல்லி அழைத்து நன்றி தெரிவித்தார் எடப்பாடி. ஒரு சில மணி நேரங்களில் நெடுஞ்சாலை நகரில் அவர் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் கார்கள் நுழைய முடியாதபடி நெரிசல் அதிகமானது. அதனால் தெரு முனையிலேயே கார்களையும் டூவீலர்களையும் விட்டுவிட்டு நடந்து வரத் தொடங்கினார்கள்.
எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது வார இறுதி என்றால் சேலத்துக்கு சென்றுவிடுவார். 2018 டிசம்பர் மாதம் ஐந்து நாட்கள் சேலத்தில் தொடர் பயணம் மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளைத் தொகுத்து எடப்பாடியின் சேலம் டைரி என்ற தலைப்பில் குறுந்தொடராக எழுதி மின்னம்பலத்தில் வெளியிட்டோம். அந்த தொடரில் நாம் குறிப்பிட்ட சில பழக்க வழக்கத்தை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை எடப்பாடி என்பது இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் தெரிந்தது.
அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க வரிசையில் தொண்டர்களும் பல்வேறு தரப்பினரும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கையில் பொக்கே, சால்வை, மாலை என்று பரிசுப் பொருட்களையும் எடுத்து வருகிறார்கள்.
யாரேனும் கையில் மாலை எடுத்து வருவதைப் பார்த்துவிட்டால் எடப்பாடிக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் சஃபாரி அணிந்த உதவியாளர்கள் உடனடியாக தாங்கள் கையில் வைத்திருக்கும் ஒரு சால்வையை பின்னால் இருந்தபடியே எடப்பாடிக்கு போர்த்தி விடுகின்றனர். ‘என்னப்பா… அவங்க அணிவித்துச் சென்ற சால்வையை எடுத்து வைக்காமல் மறுபடியும் திடீர்னு தலைவருக்கு போட்டு விடுறாங்களே?’ என்று கூட சிலர் பேசிக் கொண்டனர்.
ஆனால், சஃபாரி உதவியாளர்கள் எடப்பாடியின் கழுத்தில் சால்வையை போட்ட அடுத்த சில நொடிகளில் மாலையோடு வருபவர்கள் அவரை நெருங்கினார்கள். ஏற்கனவே எடப்பாடியின் சட்டை மீது சால்வை போர்த்தப்பட்ட நிலையில் அதன் மீது மாலைகளை அணிவித்தார்கள் வந்தவர்கள். வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட எடப்பாடி மாலைகளை கழற்றியவுடன் சால்வையையும் கழற்றிவிடுகிறார்.
மாலைகளில் இருக்கும் ஈரம், பூக்கள் ஆகியவை சட்டை காலருக்குள் புகுந்து தோள்களில் இறங்கி உள்ளே குறுகுறுப்பை ஏற்படுத்திவிடுவதோடு… வெள்ளை சட்டையிலும் சில நேரம் கறைகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் யாரேனும் மாலை அணிவிக்க வந்தால் உடனே எடப்பாடி ஒரு சால்வையை எடுத்து போர்த்திக் கொண்டுவிடுவார்.
அவர்கள் கொண்டுவந்த மாலையை மரியாதையோடு ஏற்கவும் வேண்டும், அதேநேரம் அந்த மாலையால் தனக்கு பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சால்வை ஏற்பாடு. எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கத்தை முதலில் நாம் 2018 ஆம் ஆண்டு பார்த்தோம். அதற்கு முன்பிருந்தே அவரிடம் இருந்த இந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.
இப்படியாக காலை 8 மணி முதல் வாழ்த்துகளைப் பெறுவதற்காக நிற்க ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமிக்கு இடையிடையே கேழ்வரழகு கூழ், பழச்சாறு ஆகியவை கொண்டுவரப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை அருந்தியபடியே மதியம் 2. 30 மணி வரை நின்று வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். அதன் பின் உணவு உண்டுவிட்டு மீண்டும் வாழ்த்துகளை பெற ஆரம்பித்தார். மாலை வரை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்தார்.
காலை முதல் அந்த பகுதியில் போலீஸ்காரர்கள் பெரிதாக இல்லாத நிலையில், நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து நெடுஞ்சாலை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை ஒட்டி டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதன் பிறகே போலீஸார் டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் பாதுகாப்புப் பணிகளிலும் வேகவேகமாக இறங்கினர்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் போராட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி கொண்டாடியிருக்கும் பிறந்தநாள் இது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவரை வாழ்த்தியிருக்க்கிறார்கள்.
தலைவர்களின் வாழ்த்துகளை விட தொண்டர்களின் வாழ்த்தே முக்கியத்துவம் பெற்றுள்ளது. சத்தமில்லாமல் சேலத்தில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியிருப்பதாக மே 12 ஆம் தேதி மாலை உளவுத்துறை ரிப்போர்ட் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளது.
–வேந்தன்
விமானத்தை சேதப்படுத்திய யூடியூபர்: 20 ஆண்டுகள் சிறையா?
பிடிஆரை சந்தித்த நிதித்துறை அதிகாரிகள்!