பொதுவாகவே எதிர்க்கட்சிகளில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியை நோக்கித்தான் செல்வார்கள். இதுவே அரசியல் எதார்த்தமும் கூட. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வித்தியாசமாக… ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து நிர்வாகிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் விலகி எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்கள். AIADMK-BJP to vacate Krishnagiri District DMK
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட சுமார் 500 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது திமுக தலைமையை அதிரவைத்துள்ளது.
ஏன் என்னாச்சு? கிருஷ்ணகிரி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஜனவரி 7 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும் பர்கூர் ஒன்றிய சேர்மன் கணவருமான வி.சி. கோவிந்தராஜன் தலைமையில் 9 கவுன்சிலர்கள், மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சில உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உட்பட சுமார் 500 பேர், அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமியுடன் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.
இதை விட அதிரடியாக மேலும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பத்தாயிரம் பேர் ஜனவரி 10 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைய தயாராகி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இப்படி திடீரென திமுக சரிவதற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர் மதியழகன் மீதுள்ள அதிருப்திதான்.
பர்கூர் எம். எல். ஏ. வும் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான மதியழகன் இதற்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தில் மாநில பொறுப்பில் இருந்து வந்தார். கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணம் வைத்திருப்பவர் என்பதால் திமுகவில் சேர்க்கப்பட்டு, எம். எல். ஏ. சீட் கொடுத்த உடன் போனஸாக மாவட்ட செயலாளர் பதவியும் அள்ளிக் கொடுத்தது திமுக தலைமை.
கோடிகளில் புரளும் மதியழகன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, காலங்காலமாக திமுகவில் உழைத்து வந்தவர்களை ஓரம்கட்டினார். தனக்கு வேண்டிய ரஜினி மன்றத்தினருக்கு திமுகவில் பொறுப்பு கொடுக்கத் துவங்கினார்.
சமீபத்தில் கட்சியில் பொறுப்பு போட்டதில் 80% பேர் ரஜினி மன்றத்தினர்தான். 20% பேர்தான் ஒரிஜினல் திமுகவினர்.
உதாரணமாக பஜாஜ் ஷோரூம் நடத்தி வரும் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்த இளையராஜாவை திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக நியமித்துள்ளார்.
இதைப் பற்றியெல்லாம் பல முறை புகார்கள் அனுப்பியும், முறையிட்டும் திமுக தலைமை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை, இதன் விளைவாகதான் திமுக மாவட்ட செயலாளர் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இன்று சேர்ந்துள்ளனர். பத்தாம் தேதி பாஜகவில் இணைய உள்ளனர் திமுகவினர்” என்றனர்.
இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுகவினர் இணைந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியிலிருந்த திமுக ஐடி விங்க் நிர்வாகிகள் 20 பேர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் தலைமையில் இணைந்துள்ளனர்.
இப்படி திமுக தொண்டர்களும் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிமுக, பாஜகவில் சேர்ந்து வருவது திமுக தலைமையை அதிரவைத்துள்ளது.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’அயலான்’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?
’முதன்முறையாக 8 மாதத்தில் உருவான தொழிற்சாலை’: ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பெருமிதம்!
AIADMK-BJP to vacate Krishnagiri District DMK