அதிமுக – பாஜக மோதல் : எடப்பாடி ஆலோசனை!
அதிமுக பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 8) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து திலீப் கண்ணன், ஜோதி, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அதிமுகவை எச்சரிக்கும் விதமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பேசினார். கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்தனர்.
இவ்வாறு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில். பாஜகவிலிருந்து மேலும் 2 நிர்வாகிகள் விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (மார்ச் 8) தங்களை இணைத்துக்கொண்டனர்.
பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் லதா, ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்திருப்பதாக இன்று சி.டி.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தச்சூழலில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள இந்தசூழலில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத் துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா
இலவச பயணம் பெண்களின் உரிமை: முதல்வர் ஸ்டாலின்
போர்க்கப்பலில் தயாரான ‘ஆபரேஷன் அரபைமா’