வைஃபை ஆன் செய்ததும் அதிமுக- பாஜக இடையேயான வார்த்தைப் போர் வீடியோக்கள் இன்பாக்சில் விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அதிமுக- பாஜக இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் பாஜக சார்பில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சனாதனம் பற்றி பேச்சு வந்தபோது 1956 இல் நடந்த சம்பவம் தொடர்பாக அண்ணா, முத்துராமலிங்க தேவர் ஆகியோரைப் பற்றி பேசினார்.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். “ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்காக தீர்மானமே நிறைவேற்றினோம். அண்ணாவைப் பற்றி இழிவாக பேசுவ தை பார்த்துக் கொண்டு அண்ணா திமுக தொண்டன் சும்மா இருக்க மாட்டான். ஆகையால் அண்ணாமலை தமது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார் ஜெயக்குமார்.
இந்நிலையில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி. சண்முகமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
‘அண்ணாமலை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்று நினைக்கிறார். மோடி மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது என்று நினைக்கிறார். அவர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்’ என்றெல்லாம் விமர்சித்த சி.வி. சண்முகம், ‘இதனால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. பாஜகவுக்குத்தான் இழப்பு’ என்றும் கூறினார்.
இதற்கு பதிலடியாக இன்று (செப்டம்பர் 17) மோடி பிறந்தநாளை ஒட்டி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘அண்ணன் சி.வி. சண்முகம் மாலை ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். அதற்குப் பிறகு ஒரு மாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்ற அண்ணாமலை,
அடுத்து எடப்பாடியையே பெயர் குறிப்பிடாமல் நேரடியாகத் தாக்கினார்.ஒரு பேட்டர்ன் ஆக என்னை எதிர்ப்பதை செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நான்குபேர்தான் எனக்கு எதிராக பேசுவார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் நேரடியாக நானே பேசுவேன். செய்தித் தொடர்பாளகளை ஏவி விட்டு, தூண்டிவிட்டு அவர்களை பேச வைத்துவிட்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன்,
கூழைக் கும்பிடு போட்டு பதவிக்கு வந்தவன் நான் அல்ல. கூட்டணி தேவைதான். ஆனால் அடிமையாக இருக்க முடியாது. அதிமுகவுக்குத்தான் பாஜக கூட்டணி தேவை. ஏனென்றால் தமிழ்நாடு அரசின் டிவிஏசி இருக்கிறது’ என்று இறங்கியடித்தார் அண்ணாமலை.
செப்டம்பர் 14 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்த சில நாட்களிலேயே அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் தீவிரம் அடைந்திருக்கிறது.
இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் கேட்டால், ‘அமித் ஷா சந்திப்பின் போது எடப்பாடியுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார். இத்தனை தொகுதிகள் அத்தனை தொகுதிகள் என்றெல்லாம் எதுவும் பேசப்படவில்லை. ஆனால் அதிமுகவே சில செய்திகளைப் பரப்பி விடுகிறது.
நடைப் பயணத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி என்பதை அண்ணாமலை மேலிடத்திடம் வலியுறுத்தி வருகிறார். இப்போது நடைப் பயணத்தில் தான் சந்திக்கும் அனுபவங்களை வைத்து மேலிடப் பொறுப்பாளர்களுக்கு அண்ணாமலை தொடர்ந்து அப்டேட்களை அனுப்பி வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இருப்பதாக சொல்கிறது, ஆனால் நமது நடைப் பயணத்தில் எந்த இடத்திலும் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. துவக்க விழாவுக்கு எடப்பாடியே ராமேஸ்வரத்துக்கு வரவில்லை. மற்ற அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்கள் மீதான ஊழல் வழக்குகளுக்காக பாஜக மேலிடத்திடம் மரியாதையாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அதிமுக தலைமை, தமிழக பாஜகவை இரண்டாம் பட்சமாகத்தான் நடத்துகிறது. இதை நாம் ஏற்றுக் கொண்டால் எக்காலத்திலும் பாஜக வளராது. எனவே பாஜக தலைமையில் தனியான கூட்டணி அமைவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் அண்ணாமலை.
இந்த நிலையில் அவரது நடைப் பயணம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்றும், வருகிற சட்டமன்றத் தேர்தலை பாஜக தலைமையிலான கூட்டணியோடு சந்தித்தால்தான் நல்லது என்றும் மேலிடப் பொறுப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. இந்த பின்னணியில்தான் கோவையில் சி.வி. சண்முகத்துக்கு பதில் சொல்கிற சாக்கில் ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஆசியகோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி சாம்பியன்!
காவிரி நீர் : டெல்லி செல்லும் குழுவில் இடம் பெற்றவர்கள் யார் யார்?