வைஃபை ஆன் செய்ததும் அதிமுக கூட்டணி பற்றிய பல்வேறு நிகழ்வுகளின் வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதும் சர்ச்சைகள் நீடித்தன. கூட்டணி முறிந்த பின்னும் சர்ச்சைகள் தொடர்கின்றன. செப்டம்பர் 25 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அதை கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி அறிவித்தார். அதன் பிறகு பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுகவும், அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று பாஜகவும் தத்தமது முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்தன. கூட்டணி முறிவு என்பது தற்காலிகமானதுதானா என்ற சந்தேகம் இதனால் ஏற்பட்டது.
இதைப் போக்கும் வகையில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார் கே. பி. முனுசாமி. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது உறுதியான முடிவு என்றும் வரும் 2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக பாஜக இல்லாமல் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.
அதுமட்டுமல்ல நாங்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எந்த அழுத்தமும் பாஜக தேசிய தலைமைக்கு கொடுக்கவில்லை. அப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான விஷயத்தை மூத்த கட்சியான அதிமுக செய்யாது என்று குறிப்பிட்டார் முனுசாமி.
பொதுவாகவே அண்ணாமலை விவகாரங்களில் அதிமுக தலைமையின் கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான் சுடச்சுட கடந்த சில வாரங்களாக வெளிப்படுத்தி வந்தார். கூட்டணி முறிந்தது என்பதையும் கூட்டணி முறிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் ஜெயக்குமாரே பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்தார். ஆனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு இந்த விஷயங்களை ஊடகங்களில் கையாளும் பொறுப்பை இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களிலும் கே.பி. முனுசாமியிடமே ஒப்படைத்தார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயக்குமார் பட்டாசு வார்த்தைகளால் பத்திரிக்கையாளர்களிடம் பேசி மேலும் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு விடுமோ என்பதால்தான் பக்குவமாக பேசக்கூடியவரான கே. பி. முனுசாமியைத் தேர்ந்தெடுத்தார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். அப்படி என்றால் பாஜகவோடு இன்னமும் நீக்குப் போக்கையே விரும்புகிறதா அதிமுக என்ற கேள்வியும் அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
காலையில் இந்த பரபரப்பு என்றால் மாலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விலகிய நிலையில்… பன்னீர்செல்வம் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே தன்னோடு பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறிய பன்னீர்செல்வம்… நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தேசிய கட்சி தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதன் மூலம் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில வாரங்களாக முத்துராமலிங்க தேவர், சாண்டோ சின்னப்பா தேவர் ஆகியோரை குறிப்பிட்டு வெவ்வேறு இடங்களில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. முக்குலத்து மக்களை குறிவைத்து தான் அண்ணாமலை இவ்வாறு பேசி வருவதாக பாஜக தரப்பிலேயே சொல்கிறார்கள்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி காலை தமிழ்நாடு பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. பிறகு மாலை கட்சியின் மையக்குழு கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதிமுக தலைமை கூட்டணி இல்லை என்ற அறிவித்துவிட்ட பிறகு பாஜக தரப்பிலிருந்து அதன் தேசிய தலைமையோ, மாநில தலைமையோ இது பற்றி எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தேசிய தலைமையோடு ஆலோசித்து அக்டோபர் 3ஆம் தேதி கூட்டப்பட்டு இருக்கிற இந்த கூட்டத்தில்… பாஜக மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகளின் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் பிறகு மையக் குழுவிலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஆசிய போட்டிகள் 2023: 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
டெங்கு தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.வுக்கு காய்ச்சல்!