டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு எதிராக சதுர்த்தியில் எடப்பாடி நடத்திய சதுரங்க வேட்டை! -முழுமையான பின்னணி!

அரசியல்
வைஃபை ஆன் செய்ததும், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் அறிவித்த வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 17 டிஜிட்டல் திண்ணையில், ‘நடைப் பயணம் முடிவதற்குள் உடையும் கூட்டணி-அண்ணாமலை அட்டாக் பின்னணி’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.  24 மணி நேரத்துக்குள் செப்டம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் சென்னை ராயபுரம் தேன் விநாயகர் கோயிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்குப் பின், ‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது கட்சியின் கருத்து. திட்டவட்டமான கருத்து. அண்ணாமலை தலைவர் பதவிக்கான தகுதியற்றவர். பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஜ்’ என்றெல்லாம் அணிவரிசைத் தாக்குதலை பாஜக மீது நடத்தினார்.
இதற்குப் பின்னணி என்ன?
செப்டம்பர் 11 ஆம் தேதி அண்ணா பற்றி அண்ணாமலை தொடங்கிய சர்ச்சை பேச்சு, அதற்கு ஜெயக்குமார் கண்டனம், சி.வி. சண்முகத்தின் காட்டமான பதில் தாக்குதல் ஆகியவை தெரிந்த விஷயம்தான்.  செப்டம்பர் 17 ஆம் தேதி கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டியில் சி.வி. சண்முகத்தை தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் கடுமையாக தாக்கினார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சகட்டுமேனிக்கு விளாசினார்.
அண்ணாமலை அளித்த பேட்டியை பார்த்த சி.வி. சண்முகம் சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று பிற்பகல் போன் செய்திருக்கிறார். ‘தமிழ்நாட்டில்  நம் கூட்டணிக்கு தலைவர் நீங்கள்தானே… அந்தாளு என்னமோ அவர்தான் கூட்டணித்  தலைவர் மாதிரி பேசுறாரு? உங்களையும் என்னையும் மிகக் கேவலப்படுத்தியிருக்காரு. இதுக்கு உடனடியாக பதில் சொல்லணும். பாஜகவுடன் கூட்டணி இல்லைனு அறிவிக்கணும்’ என்று சி.வி. சண்முகம் எடப்பாடியிடம் வற்புறுத்தியிருக்கிறார்.
இதையடுத்து நியூஸ் ஜெ. தொலைக்காட்சியில் இருந்து கோவையில் அண்ணாமலை அளித்த  பேட்டியின் முழு வீடியோவையும்  அனுப்பச் சொன்னார் எடப்பாடி. அவர்கள் அனுப்பியதும் சேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் இருந்தபடியே அண்ணாமலை பிரஸ்மீட்டை நேற்று மாலை பார்த்திருக்கிறார். அதில் தன்னைப் பற்றியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பற்றியும் அண்ணாமலை பேசிய வார்த்தைகளைக் கேட்டு கடும் கோபம் அடைந்தார் எடப்பாடி.  உடனடியாக வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.
 இதற்கிடையே நேற்று கோவை பிரஸ் மீட் முடிந்தபிறகு அண்ணாமலையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி. சண்முகத்துக்கும் போன் போட்டு  பேசியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி நடத்திய ஆலோசனையின் போது, ‘கூட்டணி  இப்போது இல்லை. தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கலாம்.  தேசிய  பாஜக தலைமையின் அனுமதியோடுதான் அண்ணாமலை பேசுவதுபோல தெரிகிறது.  அதனால் தேசிய தலைமைக்கும் நாம் செக் வைப்போம். ஒருவேளை அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால் கூட்டணி வைப்பது பற்றி அப்போது பேசிக் கொள்ளலாம்’ என்று அந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
நேற்று இரவு கடந்ததும் இன்று (செப்டம்பர் 18) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்தநாள்.  அவரை வாழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி லயனில் வந்திருக்கிறார். அப்போது ஜெயக்குமாரிடம் பிறந்தநாள் வாழ்த்துகளோடு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு பூஜை எப்போது என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி.  ‘ராயபுரம் தேன் விநாயகர் கோயிலுக்கு போகிறேன்… அங்கே அன்னதானம் செய்கிறோம். இன்னும் பல நிகழ்ச்சிகள் இருக்குண்ணே’ என்று சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.
அதைக் கேட்ட எடப்பாடி, ‘நானும் காலையிலயே பூஜை முடிச்சுடுவேன். நீங்க கோயில் நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு பிரஸ்ஸை பார்த்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லைனு அறிவிச்சுடுங்க. அண்ணாமலை ரொம்ப அதிகமாக போயிக்கிட்டிருக்காரு.  இதுக்கு மேலையும் சும்மா இருக்க முடியாது. உங்க கருத்தா கட்சி கருத்தானு பிரஸ்ல கேட்பாங்க. கட்சியின் கருத்துதான் இதுனு திட்டவட்டமா சொல்லிடுங்க’ என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்துதான் ராயபுரம் தேன் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி முடித்த பிறகு கூட்டணி முறிவு அறிவிப்பை வெளியிட்டார் ஜெயக்குமார்.
ஜெயக்குமாரின் பேட்டியின்போது சென்னை பனையூரில் உள்ள தன் வீட்டில்தான் இருந்தார் அண்ணாமலை.  தகவல் அறிந்து பாஜக நிர்வாகிகள் சிலர் அண்ணாமலையைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘வி ஆர் கோயிங் இன் ரைட் பாத் ணா  (we are going in right path)  அதாவது நாம சரியான பாதையில போயிட்டிருக்கோம்ணா. என்னை தலைவர் பதவியில இருந்து எடுத்தாலும் பாத்துக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.  இந்த நிலையில் செப்டம்பர் 18 மாலை பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் பனையூர் சென்று அண்ணாமலையை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் எடப்பாடியிடம் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
+1
0
+1
9
+1
0
+1
4
+1
2
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *