அலுவலகம் நுழையும்போதே ஆட்டோமேட்டிக்காக அலுவலக வைஃபை கனெக்ட் ஆனது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட செய்தி பார்வைக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”அதிமுகவில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் தான் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து மட்டுமல்ல, அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து தன் இயல்புக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ஓபிஎஸ்.
மேலும் அதிமுகவில் இருந்து அகற்றப்பட்ட தொகுதிச் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர் பதவிகளை மீண்டும் உருவாக்கி அந்த பதவிகளில் ஏற்கனவே இருந்தோர் மீண்டும் அதே பதவிகளில் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் பலரையும் நீக்கினார். அரசியல் ரீதியாக இப்படி என்றால் சட்ட ரீதியாக ஜூலை 10 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஓபிஎஸ்.
அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்க, அவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் கட்சியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் அதிமுகவை கைப்பற்றுவதில் பாஜகவின் உதவியையும் இவர்கள் இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் நாடியிருக்கிறார்கள். ஏனென்றால் கட்சி யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய முடியும். இப்போது தேர்தல் ஆணையம் மத்திய ஆளுங்கட்சியான பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. எனவே பாஜகவின் தயவு இருந்தால்தான் கட்சியை கைப்பற்ற முடியும் என்பதில் எடப்பாடியும், பன்னீரும் தெளிவாகவே இருக்கிறார்கள்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தபோது கூட எடப்பாடி, பன்னீர் இருவருமே அவரை சந்தித்துப் பேச கடுமையாக முயற்சித்தார்கள். ஆனால் சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் எடப்பாடியையும், சென்னையை விட்டு புறப்படும்போது விமான நிலையத்தில் ஓ.பன்னீரையும் சந்தித்து தன் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு குழப்பத்தையே பதிலாக அளித்துவிட்டுச் சென்றார் மோடி.
ஆனபோதும் ஓபிஎஸ் தனக்கு வேண்டிய ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் மூலம் டெல்லியில் லாபி செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியோ முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் போன்றோர் மூலம் தனக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரண்டு தரப்பினரும் ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி டெல்லியில் அவர்களுக்கான முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். எடப்பாடி, பன்னீர் ஆகிய இரு தரப்பினரும் தத்தமது லாபிகள் மூலம் பாஜகவின் தலைமையை தங்களுக்கு சாதகமாக மாற்ற கடுமையாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் சசிகலாவும் தற்போது பாஜகவுடன் பேச்சைத் துவக்கியிருக்கிறார். டிடிவி தினகரனும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதை குறைத்துக் கொண்டு தமிழகத்தை ஆளும் திமுக மீது தனது எதிர்ப்பை அதிகரித்திருக்கிறார். அமலாக்கத்துறை விசாரணைக்காக டெல்லி சென்ற தினகரனிடம் பாஜக சில டீல்களை வைத்திருப்பதாகவும் பேச்சு இருக்கிறது. இப்படி அதிமுக இப்போது அதிகாரபூர்வகாக இரண்டு பிரிவாகவும், அதிகார பூர்வமற்ற சசிகலா மேலும் ஒரு பிரிவு, அதையெல்லாம் தாண்டி அமமுக தினகரன் என நான்காம் பிரிவு என நான்காக இருக்கிறது.
ஆனால் பாஜக தலைமையின் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. டெல்லியில் அமித் ஷாவுக்கு நெருக்கமான தரப்பினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த பதிலோ வேறு லெவல்.
’சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது அவர் மோடி, அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தார். ஆனால் நடக்கவில்லை. சென்னை வந்தபோது எடப்பாடி, பன்னீர் இருவரும் மோடியை தனியாக சந்திக்க முயற்சித்தனர். ஆனால் இருவருமே சந்தித்துப் பேச முடியவில்லை.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதில் அமித் ஷா தெளிவாக இருக்கிறார். ஜூலை 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்தபோது கூட இதைத்தான் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாடு பாஜகவின் வலிமையை அதிகரிக்க என்ன முடிவுகள் வேண்டுமானாலும் எடுங்கள் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமித் ஷா முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடியா, பன்னீரா என்ற கேள்விக்கு ஒருவரை முழுதாக ஆதரிப்பதில் அமித் ஷாவுக்கு எந்த விருப்பமும் இல்லை.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் அதிமுகவுக்குள் யாருக்கு அதிக சக்தி என்பதை எடப்பாடியும், பன்னீரும் போட்டி போட்டு நிரூபிக்கட்டும். அப்படி யார் தொண்டர்கள் ஆதரவோடு நிர்வாகிகள் ஆதரவோடு ஜெயித்து வருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம். அதுவரை யாருக்கு ஆதரவு என்ற முன்முடிவை பாஜக எடுக்க வேண்டாம் என்பதுதான் அமித் ஷாவின் நிலைப்பாடு. தேர்தலிலும் அதிமுகவோடு கூட்டணி வைத்தால் இந்த முடிவே பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார் அமித் ஷா.
எனவே அதிமுகவில் இந்த வருடம் முழுதும் அதிகார ஆட்டங்கள் பலமானதாக இருக்கும். பன்னீர் செல்வம் ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவியை விட்டு அகற்றப்பட்ட சசிகலாவோடும், டிடிவி தினகரனோடும் சேர்ந்து கட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். இன்னொரு பக்கம் சட்ட சிக்கல்களை தீர்த்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஆயத்தமாகிறார். இதையெல்லாம் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும். அதிமுக என்ற குட்டை குழம்பி தானாகவே தெளியட்டும். எந்த மீன் பெரிதாக இருக்கிறதோ அந்த மீனை பிடித்துக் கொள்ளலா என்பதே தூண்டிலோடு நிற்கும் அமித் ஷாவின் திட்டம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!