தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 20) மாலை 5.00 மணிக்கு நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேச கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நாளை 21.03.2023 வேளாண்மை நிதி நிலை அறிக்கை தாக்கல் ஆக உள்ள நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவது வெறும் கண்துடைப்புக்காக நடைபெறுவதாகவே இருக்கும்.
தொடர்ச்சியாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த பல மாதங்களாக கலந்து கொண்டு வருகிறேன். அந்த வகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் கூட்டமாக இருக்க வேண்டுமே தவிர விவசாயிகளின் குறைகளை கேட்கும் கூட்டமாக இருக்கக் கூடாது.
சென்ற 2023 பிப்ரவரி மாதம் 28 தேதியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு விவசாய பட்ஜெட்டுக்கு முன்பு விவசாயிகளின் கருத்துக்களை கேட்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் சமயத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகிய எனக்கு அழைப்பு கடிதம் அனுப்புமாறும், அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் என்றும்,
அவ்வாறு கலந்து கொண்டால் தான் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நான் சட்டமன்றத்தில் தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு பெற்றுத்தர முடியும் எனவும் கூறியிருந்தேன்.
ஆனால் நாளை 21.03.2023 வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், 20.03.2023 இன்று மாலை 5.00 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக விவசாயிகளுக்கு நேற்று முதல் அலைபேசியில் கூப்பிட்டு தகவல் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது.
இது விவசாயிகளிடையே இக்கருத்து கேட்பு கூட்டத்தின் மீதான கடுமையான அவநம்பிக்கையும், மன வேதனையும் உருவாக்கும்.
இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் விபரங்களை அரசுக்கு எப்போது கொண்டு சேர்த்து அது நாளை தாக்கல் ஆகவுள்ள விவசாய நிதிநிலை அறிக்கையில் எப்படி பிரதிபலிக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ’மாலை 5.00 மணிக்கு கூட்டம் நடத்துவதால் கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகளின் அன்றாட பணியில் சுணக்கம் ஏற்படும் என்றும் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கருதுகிறேன்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகிய நான் கலந்து கொண்டு பேசிய எதுவும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதும், நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம், மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம், கரும்பு வெட்டு கூலி நிர்ணயம் செய்வது, நீர்நிலைகளில் கழிவு நீர் சேர்வது,
மயில் காரணமாக உற்பத்தி இழப்பு, விவசாய நிலங்கள் அளந்து கொடுப்பதில் சர்வே துறையில் உள்ள மிகுந்த சுணக்கம் மற்றும் சொட்டு நீர் பாசன வசதியில் உள்ள பிரச்சனைகள் போன்ற பல முக்கிய காரணங்கள் இருந்தும் அவற்றை முறையாக அரசின் கவனத்துக்கு கொண்டு சேர்க்கும் இந்த கூட்டமும் மிக கால தாமதமாக நடக்க இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது’ என தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.
பிரியா
பட்ஜெட் – மின்மினிப் பூச்சியல்ல உதயசூரியன்: மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் விமர்சனம்: எடப்பாடிக்கு செந்தில் பாலாஜி பதில்!