முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது முக்கனி மேம்பாட்டு திட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது,
முக்கனிகளில் முதற்கனியான ’மா’ விற்கான சிறப்புத்திட்டம் வரும் ஆண்டில் 27 கோடியே 48 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
வாழைக்கான சிறப்புத்திட்டம், 12 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
பலா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள், பயிற்சிகள் வழங்கவும், பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கவும், 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய பூங்கா – ரூ. 8 கோடி!
மேலும் தமிழ்நாட்டில் 5 இடங்களில் புதிய பூங்கா மற்றும் தோட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள வேளிமலையில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ’முல்லைப் பூங்கா’ அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமலைச் சமுத்திரம் என்ற இடத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ’மருதம் பூங்கா’ அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் கடற்கரை அருகில் ’சூரியத் தோட்டம்’ 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில், 1 கோடி ரூபாய் செலவில் ’செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம்’ அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ’அரசுத் தோட்டக்கலைப் பண்ணை’ 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மூலிகைப் பயிர் சாகுபடி – ரூ. 5 கோடி!
மூலிகைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கு வகையில், கண்வலிக் கிழங்கு (செங்காந்தள்), சென்னா, நித்தியகல்யாணி, மருந்துக்கூர்க்கன்போன்ற மூலிகைப் பயிர்களை 14680 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!
சுந்தர்.சி படத்தின் ஹீரோவான கவின்?