டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை எதிர்த்து… ஓபிஎஸ்-டிடிவி- சசிகலா முக்கோணக் கூட்டணி சாத்தியமா?
வைஃபை ஆன் செய்ததும் வாசக நண்பர்களின் சில கேள்விகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் படித்துவிட்டு பதில்களை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மார்ச் 28ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். அந்த சூட்டோடு சூடாக அதிமுகவில் புதிய உறுப்பினர் அட்டைகள், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் மாற்றம் பற்றிய ஆலோசனை என்று வேகமாக செயல்பட தொடங்கி விட்டார் எடப்பாடி.
அதே நேரம் ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து போராடுவேன் என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பெஞ்சில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்தும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதற்கு தடை விதிக்க கோரியும் மேல்முறையீடு செய்துள்ளார்.
சட்டரீதியாக சிற்சில வாய்ப்புகளை மட்டுமே பன்னீர்செல்வம் பெற்றிருக்கும் நிலையில் அரசியல் ரீதியாகவும், கட்சி -கட்டமைப்பு- கள ரீதியாகவும் பன்னீர்செல்வம் எடப்பாடியை விட மிக மிகப் பின்தங்கி இருக்கிறார் என்பதே நிலவரம்.
இந்த நிலையில் இனியாவது பன்னீர்செல்வம் தான் ஏற்கனவே கூறியபடி சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திப்பாரா… அவர்களோடு இணைந்து செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு பன்னீர் ஆதரவாளர்கள் மத்தியில் பரவலான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
பன்னீர்செல்வத்தின் தாயார் சமீபத்தில் மறைந்த போது அவரது வீடு தேடிச் சென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்தார். பன்னீர்செல்வம் சென்னை வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது வீடு தேடி சென்று ஆறுதல் தெரிவித்தார்.
ஆனால் பன்னீர்செல்வத்தோடு இணக்கமாக இருப்பதாக கூறப்படும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இதுவரை பன்னீர்செல்வத்தை சந்தித்து இந்த தனிப்பட்ட அவரது இழப்புக்கு கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக இவர்கள் ஒன்றிணைவார்களா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
’பன்னீர்செல்வம் தனது செல்வாக்கை எந்த தேர்தலிலும் தனியாக நின்று இதுவரை நிரூபிக்கவில்லை… ஆனால் எங்கள் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து தேர்தல்களை தனது தலைமையில் சந்தித்து சுமார் 3 சதவீத வாக்குகளை பெற்றார். இது இன்னும் அதிகரிக்கும். எனவே பன்னீர்செல்வம் தான் தினகரனை தேடி வர வேண்டும்’ என்கிறார்கள் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இப்போது வரை நடைபெறும் அதிமுகவின் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் மூல முழு முதல் காரணம் பன்னீர்செல்வம் தான். அவரை மீண்டும் அருகில் சேர்த்துக் கொண்டால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலும் அதிக குழப்பங்கள் ஏற்படும் என்று பன்னீர் தினகரன் நட்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் அரசியல் ரீதியான இடைவெளி அதிகரித்து விட்டது என்று கூறுகிறார்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்த மன்னார்குடி காரர்கள்.
ஒருங்கிணைந்த அதிமுக என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் அது எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை அதிமுகவாக தற்போது உருப்பெற்று விட்டது. ஆனால் எடப்பாடியை எதிர்க்கும் சசிகலா, டிடிவி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைவார்களா என்பது இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
ஆனாலும் இந்த சவால்களை எல்லாம் தாண்டி இந்த மூவரையும் ஒருங்கிணைத்து ஒரு முக்கோண கூட்டணி அரசியலை ஏற்படுத்தி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக எதிர்ப்பதற்கும் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதற்கும் தென் மாவட்டத்தில் சிலர் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
”கட்டிங் பிளேடு வைத்து பல்லைப் பிடுங்கினார்”- சஸ்பெண்ட் ஏஎஸ்பி மீது சரமாரி புகார்கள்!
’மோடி என்ற சாதியே இல்லை’: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி