கொல்கத்தா போராட்டத்தில் அண்ணா, கலைஞர், ஸ்டாலின்
மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அந்த அறிக்கையில், ’ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்றாக கொண்டுவர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது.
இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
அண்ணாவும், கலைஞரும்:
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கொல்கத்தா நகரில் கலாச்சார மையமான ரவீந்திர சதானிலிருந்து தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா கிராசிங் வரை பேரணி நடத்தப்பட்டது.
”பங்களா போக்கா” என்ற அமைப்பு சார்பில் நேற்று (அக்டோபர் 12 ) நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்திய ஏகாதிபத்தியத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என பலர் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
அதில் சிலர் ஏந்தி வந்த பதாகைகளில், பேரறிஞர் அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
நெருப்புடன் விளையாடக் கூடாது:
இதில் கலந்து கொண்டு பேசிய பங்களா போக்கோ பொதுச்செயலாளர் போக்கோ கர்கா சட்டர்ஜி, ’இந்திய ஏகாதிபத்தியத்தின் முன் வங்காளிகள் ஒருபோதும் சரண் அடைய மாட்டார்கள், சரணடைந்து பணிந்து விடுவார்கள் என்று டெல்லி நினைத்தால் அவர்களின் எண்ணம் பலிக்காது.
இந்தியைப்போல எங்களுக்கும் சம மொழி உரிமை வேண்டும், இதற்காகவா வங்க தியாகிகள் தங்கள் உயிரை நீத்தார்கள், இந்திய ஏகாதிபத்தியம் அடிமைகளாக்க நினைத்தால் வங்காளிகள் இந்திய ஏகாதிபத்தியத்தின் அனைத்து அடையாளங்களையும் இந்த புனித பூமியிலிருந்து அழிப்போம்.
இந்திக்கு எதிராக நேர்மையான மக்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். இந்திய ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறது. பாரதிய ஜனதாவும் டெல்லியும் நெருப்புடன் விளையாடக்கூடாது” என்று அவர் எச்சரித்தார்.
திமுகவும் இந்தி எதிர்ப்பும்:
திமுக அண்ணாவால் தொடங்கப்பட்டபோது இந்தி திணிப்பு கூடாது, சமத்துவமும், சமூக நீதியும் வேண்டும் என்பதே அடிநாத கொள்கையாக வைக்கப்பட்டது. மேலும், அந்தக் கட்சி இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அந்தப் போராட்டத்தைக் கண்ட அப்போதைய இந்தி ஆதரவாளர்கள் சற்று மிரண்டே போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
முக்கியமாக திமுக அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் (1967) மாபெரும் வெற்றி பெற்று தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றி தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தது, தற்போதும் செய்துவருகிறது. தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்தி திணிப்புக்கு எதிராக தன்னுடைய கண்டங்களை தெரிவித்துவருகின்றார்.
இப்படிப்பட்ட நிலைமையில், மேற்குவங்கத்தில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான பேரணியில் அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றதை கண்ட திமுகவினர், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு என்ற விதையை போட்டது இவர்கள் இருவர்தான் என அந்த புகைப்படங்களை பகிர்ந்துவருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ஆம் தேதி போராட்டம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?