வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்டேட்டுகள் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை. அதே நேரம் கரூர் – சேலம் நெடுஞ்சாலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கட்டி வரும் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்புள்ள பங்களாவுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதை ஆய்வு செய்து முடக்கி இருக்கிறார்கள்.
மேலும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாயார் லட்சுமி ஆகியோருக்கும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. ஏற்கனவே தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றுடன் ஆகஸ்ட் 12ஆம் தேதி செந்தில் பாலாஜியின் கஸ்டடி முடிவடைகிற நிலையில், அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர் படுத்த வேண்டும். அப்போது, ‘செந்தில் பாலாஜியிடம் மேற்கொண்ட கஸ்டடி விசாரணை போதுமானதாக இல்லை. அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடி நீட்டிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை.
அதே நேரம் தலை மறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரையும் கைது செய்து அவரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்கவும் தீவிரமாகி இருக்கிறது அமலாக்கத்துறை. இது மட்டுமல்ல ஏற்கனவே ரெய்டு நடத்திய இடங்கள்… சர்ச்சைக்குரிய சொத்துக்கள் அமைந்திருக்கும் இடங்களுக்கு செந்தில் பாலாஜியை நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காகத்தான் அவரது கஸ்டடி நாட்களை மேலும் நீட்டித்து தருமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்கள் அமலாக்கத்துறை.
இதே போல அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்திருக்கும் அதிரடி முடிவு பொன்முடிக்கு மட்டுமல்ல மற்ற பல அமைச்சர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில்… அந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இதுகுறித்து பதில் அளிக்குமாறு பொன்முடி தரப்புக்கும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகளையே கேள்வி கேட்டிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இது மட்டுமல்ல இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த அப்போதைய தலைமை நீதிபதியின் உத்தரவையும் அவர் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
மேலும் வேலூர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை மிக வேகமாக நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்டி உள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , ஜூன் 23ஆம் தேதி இறுதி கட்ட வாதங்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நான்கே நாட்களில் 220 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியோடு குறிப்பிடுகிறார். மேலும் அந்த நீதிபதி ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையெல்லாம் குறிப்பிட்டு இருக்கிற உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரங்களை செயல்படுத்த முடிவெடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவெடுத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பொன்முடி தற்போது மீண்டும் அந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு இதனால் தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு நன்றி தெரிவித்ததோடு… கடந்த சில மாதங்களில் தமிழ்நாடு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதா ஜீவன் போன்றவரும் சொத்து குவிப்பு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது வழக்கின் தீர்ப்புகளையும் இதே போல மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஒரு பக்கம் அமலாக்க துறையில் இருந்து பொன்முடிக்கு கடும் நெருக்கடி இருக்கிற நிலையில்... இன்னொரு பக்கம் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட வழக்கை தமிழ்நாடு நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தானாக முன்வந்து விசாரிப்பது பொன்முடிக்கு மட்டுமல்ல அவரைப் போல ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான மற்ற அமைச்சர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வைத்துள்ள இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்வதற்கும் பாஜக தரப்பில் ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது.
டிடிவி தினகரன் திவாலானவர்: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!
அதிகரித்த கடன்… விமர்சித்த நிர்மலா சீதாராமன்: பிடிஆர் கண்டனம்!