முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு, மோடி ஆட்சியில் நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை ஆகஸ்டு 7 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று (ஆகஸ்டு 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சீரான, நீடிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் 2022 ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இது வழிவகுக்கும்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார். மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை- உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தின் விவாதப்பொருளில் இடம்பெறும்” என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஜூலை மாதத்திற்கு பின் நிதி ஆயோக் கூட்டம் இப்போதுதான் நேரடியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர், மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள்.
மோடியை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
–வேந்தன்
ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த ரவுடி: பாஜக கொடுக்கும் தைரியமா?