தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியான இரண்டு ஆடியோக்கள் திமுகவை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தையும் உலுக்கி எடுத்தன.
இந்த இரண்டு ஆடியோக்களுக்கும் தனித்தனியாக இரண்டு விளக்கங்களையும் கொடுத்தார் பிடிஆர். ஆனால் அவர் மீதான சந்தேக நிழல் திமுகவிலேயே பலருக்கும் நீங்காமல் இருந்தது.
இந்த நிலையில் மே 1ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் பிடி ஆர். மறுநாள் மே 2ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க இருந்த நிலையில் அது தொடர்பான துறை ரீதியான சந்திப்பு என்று இந்த சந்திப்பு பற்றி தகவல்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து மே 2ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திலும் பிடிஆர் கலந்து கொண்டார். அமைச்சரவை கூட்டத்திலிருந்து பிடிஆர் பாதியிலேயே வெளியேறி விட்டதாக சில வதந்திகளும் பரவின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே அமைச்சரவை கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட உங்களில் ஒருவன் கேள்வி பதில் வீடியோ காட்சி தொகுப்பில் பிடிஆர் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிடிஆர் ஆடியோ சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அதற்கு பிடிஆரே போதுமான விளக்கம் அளித்து விட்டார். இது போன்ற மட்ட ரகமான அரசியலுக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை”என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பிடிஆர் ஆடியோ சர்ச்சைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து கொண்டிருந்த நிலையில்… “நிதியமைச்சர் என்ற வகையில் அரசு பணியில் பிடிஆரை ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்வாரே தவிர, இனி கட்சி ரீதியாக பிடிஆர் பெரிய அளவில் பயன்படுத்தப்பட மாட்டார்’ என்று மதுரையிலேயே திமுகவினர் பேச ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தான் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்களில் பேசுவோரின் பட்டியல் மே 3 ஆம் தேதி முரசொலியில் வெளியானது. அதில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் உரையாற்றும் வகையில் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த வகையில் பிடிஆர் மதுரை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிம்மக்கல் பகுதியில் இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கட்சி ரீதியாகவும் பிடிஆர் கைவிடப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மதுரையில் உற்சாகமாக இருக்கிறார்கள். அதேநேரம் மே 7ஆம் தேதி நடக்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆடியோ சர்ச்சைகளுக்குப் பிறகு முதன்முறையாக மேடை ஏறுகிறார் பி டி ஆர். அந்த மேடையிலும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி விடக்கூடாது என்று மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் லோக்கல் திமுகவினர்.
ஆரா
தனியார்வசம் செல்லும் காலை உணவு திட்டம்?: ஊழியர்கள் போராட்டம்!
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா அப்டேட்… எடப்பாடி ரூட் க்ளியர்!