கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துவிட்டார். எனினும் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.
பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பல பதவிகளையும் பிரித்து அளித்து வருகிறது.
அதன்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் களம் கண்ட துணை முதல்வரான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.
இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு மத்திய இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக வழங்க வந்த இந்த இணையமைச்சர் பதவியை அவர் மறுத்துவிட்டார்.
இவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் கேபினேட் அமைச்சராக பதவி வகித்தவர். அதனால் தற்போது இணை அமைச்சராக பதவி ஏற்க அவருக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பதவியை அவர்கள் புறக்கணித்ததால் அமைச்சரவையில் அஜித் பவாரின் கட்சி தற்போது இடம்பெறவில்லை.
எனினும் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வெள்ளை உடையில் அஜித் பவார் குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா