தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமிருக்கும் துறையான தமிழக காவல்துறையின் செயல்பாட்டை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெரிதும் பாராட்டியிருக்கிறார்.
தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா இன்று (ஜூலை 31) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் டாக்டர் வெ.இறையன்பு, தமிழ்நாடு டிஜிபி டாக்டர். சி. சைலேந்திர பாபு, டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர் கே. பனீந்திர ரெட்டி, சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியரசுத் தலைவராக கடைசி சென்னை பயணம்
இவ்விழாவில் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில்,
“தமிழக காவல்துறைக்கு, குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதற்காக, சென்னையில் உங்களை சந்திப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எழில்மிகு நகரான சென்னை, எனது இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதுடன், வாழ்நாளில் என்னை வியப்படையச் செய்வதை ஒருபோதும் நிறுத்த முடியாது. இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும், தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும்.
தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதேதாடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன். உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “1859-ம் ஆண்டு மெட்ராஸ் காவல்துறை என்ற பெயரில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, பன்னெடுங்காலமாக, மக்களுடன் மிக நெருக்கமாக இருந்து வருவதன் மூலம், நாட்டில் உள்ள மிகச் சிறந்த காவல்படைகளில் ஒன்றாக, தமிழக காவல்துறை திகழ்கிறது. மிகவும் பரபரப்பான மற்றும் நெருக்கடியான காலகட்டங்களிலும், சாமான்ய மனிதர், ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எப்போதும் பாடுபட்டு வருவதுடன், மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சிறப்பாக பேணவும், பொது அமைதியைப் பராமரிக்கவும் உதவி வருகிறது” என்றார் வெங்கையா நாயுடு.
பெண் கமாண்டோக்கள் நிறைந்த மாநிலம்
மேலும் அவர், “நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை.
நமது மக்கள்தொகையில் சமபாதி அளவிற்கு பெண்கள் உள்ளபோதிலும், பல்வேறு துறைகளிலும் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் நாம் இன்னும் பெருமளவு பணியாற்ற வேண்டியுள்ளது. பெண்களுக்கு உகந்த சூழல் மற்றும் பாதுகாப்பை உருவாக்குவது, அவர்களது வளர்ச்சி மற்றும் அவர்களது முழுத் திறனை அடைய உதவுவதற்கு மிகவும் அவசியம் ஆகும். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில், கூடுதல் பொறுப்புணர்வுடன் பணியாற்றுமாறு காவல்துறையினரை வலியுறுத்துகிறேன்” என்றார் குடியரசுத் துணைத் தலைவர்.
இணையக் குற்றங்களின் சவால்!
மேலும் வெங்கையா நாயுடு, “ இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதும், ஆன்லைன் மோசடி மற்றும் எல்லைதாண்டிய குற்றங்கள் போன்ற தற்கால குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கத்தக்கது. இதுபோன்ற, 21-ம் நூற்றாண்டின் குற்றங்களை, திறம்பட்ட முறையில், விரைவாக எதிர்கொள்ள, நமது காவல் படைகள் திறன்பயிற்சி மற்றும் உரிய வசதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம். 46 இணையக் குற்ற காவல் நிலையங்களுடன், இணையக் குற்றங்களுக்கென தமிழக காவல்துறை தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இணையக் குற்றங்களை அறிவியல் பூர்வமாக விசாரிக்க ஏதுவாக, பாதுகாப்பான நகரம் திட்டத்தின்கீழ், ரூ.6.90 கோடி செலவில், டிஸ்க் தடயவியல், நடமாடும் தடயவியல் மற்றும் சமூக ஊடக சாதனங்கள், அதிநவீன தடயவியல் பணியிடத்துடன் கூடிய இணையத் தடயவியல் ஆய்வகம், அமைக்கப்படுவதாக அறிந்தேன்.
சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு அமைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு
நமது பாரம்பரியப் பெருமை மிக்க சிலைகள், ஓவியங்கள் மற்றும் பிற கலைப் பொக்கிஷங்கள் போன்ற கலாச்சார சிறப்புவாய்ந்த கலைப்பொருட்கள் திருட்டு அல்லது இழக்க நேரிட்டால், அதுபற்றி விசாரிப்பதற்கான பிரத்யேக புலனாய்வுப் பிரிவான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ள நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் என்பது சிறப்புக்குரியதாகும். அண்மையில், இந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து விலைமதிப்பற்ற பத்து பழங்கால சிலைகளை மீட்டு வந்துள்ளது. இந்தப் பணி பாராட்டத்தக்கது. நமது கலாச்சார பாரம்பரியமிக்க மற்றும் நாகரீக நற்பண்புகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே, கலாச்சார செழுமை மற்றும் வளத்தை தமிழகம் பெருமிதத்துடன் போற்றி வரும் நிலையில், நமது எதிர்கால தலைமுறையினருக்காக இதனை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் குடியரசுத் துணைத் தலைவர்.
காவலர் நலத் திட்டங்கள்
மேலும், “1076 கி.மீ தூரமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழ்நாடு, எல்லைதாண்டிய நடவடிக்கைகளைத் தடுக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற நோக்கத்தை நிறைவேற்றவும், “கடலோர பாதுகாப்புக் குழுமம்“ என்ற பெயரில் மிகச் சிறந்த கடலோர பாதுகாப்புப் பிரிவைக் கொண்டதாக உள்ளது. மாநிலத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் மற்றும் 100 சோதனைச்சாவடிகள் உள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிப்பதற்காக, காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வது, எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கவும், மதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளைத் தடுக்கவும், “காவலர் நலத் திட்டங்கள்“-ஐத் தொடங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. இதுதவிர, காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, காப்பீடு மற்றும் கல்வி உதவித் திட்டங்களையும் இம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, திறன் மேம்பாடு, கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் காவல்துறையினரின் மனப்பாங்கை மாற்றுவது போன்றவை முக்கிய அம்சங்களாகும். வலுவான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்குடன், காவல்நிலையக் கட்டடங்கள், குடியிருப்புகள், வாகன வசதி, தொலைத்தொடர்பு, பயிற்சி, ஆயுதங்கள், விரல் ரேகை பிரிவு/ தடய அறிவியல் ஆய்வகம், புள்ளிவிவர பராமரிப்பு, கணினிமயமாக்கல் மற்றும் சாதனங்களை நவீனமயமாக்க, மத்திய அரசு வழங்கும் நிதியுதவியுடன், காவல்துறையை நவீனமயமாக்க மாநில அரசும் நிதி ஒதுக்கி வருகிறது.
தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும். முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம். மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
டிஜிபிக்கு சிறப்புப் பாராட்டு
தமிழக காவல்துறை தலைவர் டாக்டர் சி.சைலேந்திரபாபுவின் வழிகாட்டுதலில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் தமிழகக் காவல் துறையினர் பணியாற்றி வருவதற்காக, காவல்துறைத் தலைவர் என்ற முறையில், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபுவுக்கு எனது சிறப்புப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்புப் படையினரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழக காவல்துறையின் அளப்பரிய பங்களிப்பை நாடு அங்கீகரித்துள்ளது. மதிப்புமிக்க குடியரசுத்தலைவரின் கொடியைப் பெறுவதையொட்டி, தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக காவல்துறையைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
ஜூலை 28 ஆம் தேதி தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் திமுக அரசின் ஏற்பாடுகளை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். மூன்றே நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழ்நாடு போலீஸின் திறமைகளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
-வேந்தன்