ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி சார்பில் ஒமர் அப்துல்லா புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து அதே ஆண்டில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
அதன்பின்னர் சமீபத்தில் அங்கு முதன்முறையாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
கடந்த 8 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேவேளையில் பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஒமர் அப்துல்லா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதலமைச்சராக அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக நேற்று (அக்டோபர் 13) அறிவித்துள்ளது.
அதில்,”ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவானது, 2019 இன் பிரிவு 54 இன் கீழ், முதல்வர் நியமிக்கப்படுவதற்கு முன் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகாலமாக ஜனாதிபதி ஆட்சியில் இருந்த ஜம்மு காஷ்மீர், இந்த வாரத்தில் முதலமைச்சர் பதவி ஏற்க இருக்கும் ஒமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசின் கீழ் செயல்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8: வீட்டாரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி
சென்னையில் போலி நகைகளை அடகு வைத்த வட மாநில கும்பல்: பிடிபட்டது எப்படி?