ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்ரீராம் சர்மா

வட நாட்டிலிருந்து வருகை தரும் தொழில் மாந்தர் அனைவருக்கும் தமிழ்நாட்டு மண்ணில் உரிய பாதுகாப்பு உறுதியாகத் தரப்படும் என நமது முதலமைச்சர் கெட்டிப்பட அறிவித்த அந்தப் பொழுது நெகிழ்ந்து நிறைந்து போனது எனதெளிய எழுத்துள்ளம்!

அன்பே சிவமென கூடி வாழ்ந்த இந்தப் பூமியை பண்பே வடிவமாய் ஆள விழையும் ஒருவர் அப்படியாகத்தான் பிரகடனப்படுத்தியாக வேண்டும்.

செடியும் கொடியும் சிப்பியும் சங்கும் எறும்பும் மழைக்காலத்து தும்பியும் சல்லித் துளிப்பறவையும் உழைத்து உயர்ந்தேற விளையும் இந்த மண்ணில் மானுடனே, உனக்கானதொரு வழி இல்லாமலா போகுமென நயந்துரை செய்த முன்னோரது எழுத்தெல்லாம் நெஞ்சகத்தில் நிழலாடி நிற்கிறது.

வாழ்வு தேடி புலம்பெயர்ந்து போவதென்பது புதிதல்ல.


சோழத்து மாறன் வழுதி கூடலை கண்டடைந்து நாராய், நாராய் செங்கால் நாராய் எனப் பாடிச் செழித்த சத்தியமுற்றப் புலவரது பெருவாழ்வதற்கு சாட்சியமாகிறது!


கிழக்கே வங்காள விரிகுடா – தெற்கே இந்துமாக் கடல் – மேற்கே அரபுக்கடலென ஏறத்தாழ முப்பது லட்சம் சதுர மைல் கொண்டு உலகின் ஏழாவது பரந்த நாடாக நிற்கும் நமது இந்தியத்தை, ‘ஆச்சரியக் கிடங்கு’ என அதிசயத்து சொல்கிறார்கள் உலக மானுடவியலாளர்கள்.


ஏறத்தாழ நூற்று முப்பது கோடி மக்கள் தொகையோடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் பல கொண்டபோதிலும் இன்னமும் இந்தியா ஒன்றுபட்டிருப்பது எப்படித்தானோ என திகைக்கிறார்கள்.


செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் எனப் பாடிய பாரதியின் வரிகளை அவர்கள் அறிய மாட்டார்கள். ஆம், இனம் மொழி கலை கலாச்சாரமென ஆயிரம் வேறுபாடுகள் இங்குண்டுதான் எனினும், உள்ளோடி நிற்கும் உணர்வு ஒன்றே. அது, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதே!


அன்றந்த 1999 மே மாதத்தில் கார்கில் போர் மூண்டபோது முசுக்கென மொத்த ஜனமும் இந்தியத் தெருவெங்கிலும் இறங்கி நின்றதே. வண்டி வண்டியாக உணவு, உடைகளை எல்லை நோக்கி அனுப்பியபடி எதிரிகளை எச்சரித்ததே.

கவனியுங்கள்…

அன்று நிகழ்ந்த முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் – தமிழர்களின் சார்பாக பதினைந்து கோடி ரூபாயை கார்கில் நிதியாக சமர்ப்பித்தார்.
நாவன்மைக்குப் பெயர்பெற்ற அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களோ, “இதை முதல் தவணையாக பெற்றுக் கொள்கிறேன்” எனப் புன்னகைத்தார்.


லேசுப்பட்டவரா கலைஞர்? “அதற்கென்ன, நாடு காப்பது தமிழர்களுக்கான இயற்கை குணமாகும். அதனை விரைவில் நீங்கள் காண்பீர்கள்” எனப் பதிலுரைத்து வந்தவர்…  
அதன்படியே அடுத்த தவணையாக இருபத்தைந்து கோடியும், மேலும் ஒரு பத்து கோடியும் கொடுத்து இந்தியாவிலேயே கார்கில் யுத்தத்துக்கான அதிக நிதியான ஐம்பது கோடியினை அள்ளிக் கொடுத்தது தமிழ்நாடுதான் என்னும் வரலாற்று செய்தியினை பதிவு செய்தார்.    

அதன் வழியே அவர் சொல்லிச் சென்றது என்ன? ஆயிரம் பேதங்கள் இங்கே உண்டெனினும் எங்கள் சொந்த சகோதர, சகோதரிகளை எந்தக் காரணம் கொண்டும் எவரிடத்தும் விட்டுக் கொடுத்து விட மாட்டோம் என்பதே!

அது, வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர்ந்த அரசாண்மையாகும். அவசரப்படும் இன்றைய அரசியல்முனைவோர்களுக்கு அது அரும்பாடமாகும்.

மில்லினியத்தின் ஆரம்ப காலத்தில் வடபுலத்து மண்ணில் சில காலம் தங்கிக் கழித்த எனக்கு, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் – ஷெனாய் உஸ்தாத் பிஸ்மில்லாகான் போன்ற ஆகப் பெரிய இசை மாமேதைகள் தோன்றியதந்த வாரணாசி மண்ணில் பெரியவர்கள் பலரோடு நெருங்கிப் பழகும் பழகும் நல்வாய்ப்பு அமைந்தது.

அந்த நாட்களில் நான் கண்ட வாரணாசி இன்று போலல்லாது மிக மிகப் பின்பட்டிருந்தது. பொதுவாக எந்த நாடு நகரத்துக்குச் சென்றாலும் ஆங்கிருக்கும் மேட்டுக்குடிகளோடு கொஞ்சமே அளவளாவுவதும் கீழ்த்தட்டுக் குடிகளின் வாழ்வு தேடி ஓடுவதுமே எனது வழக்கமாக இருந்திருக்கிறது. பாசாங்கில்லாத அன்பு அங்குதானே அதிகப்படியாக கிடைக்கும்!?

எனது அனுபவத்தில் வடவர்களில் பெரும்பாலானோர் பாசக்காரர்களாகவே  பட்டது. அவர்தம் கல்வியறிவும் வாழும் பிரதேசம் கடந்த உலகறிவும் இன்னும் பிறவும் தென்னகத்தைக் காட்டிலும் மிகப் பின்தங்கியதென்பதை காண முடிந்தது.

கடுமையான உழைப்பாளிகளான அவர்கள் குடும்பம் சார்ந்த வாழ்வை ஊன்றிக் கொண்டாடுகிறார்கள். தென்னகத்தில் நிறைந்திருப்பது போலான முதியோர் இல்லங்களை அங்கே காண முடியாது.

பீகார், உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது அஸ்ஸாம், ஒடிஸா, ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய பிற மாநிலத்தவரும் இங்கே பிழைப்புத் தேடி வருகிறார்கள்.

அப்படியாக புலம்பெயர்ந்துவரும் அந்த உழைக்கும் வர்க்கத்தவர்கள் இங்கே என்னதான் செய்கிறார்கள். தமிழர்கள் செய்ய மறுத்து ஒதுக்கிய வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். சாலை போடுவது, வீடு கட்டுவதுமான பணிகளோடு கொங்கு மண்டலமெங்கும் விரவி நெசவுத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

நகர மாந்தருக்கு சிகை அலங்காரம் செய்கிறார்கள். மேலும் சிலர் ‘ஸ்விக்கி’ வண்டியோட்டியபடி அரைகுறை தமிழில் ஓயாது அட்ரஸ் கேட்டு பசியோடு இருக்கும் தமிழர்களிடம் தாறுமாறாக வசவு வாங்குகிறார்கள்.

நான்காயிரம் ரூபாய்க்கு அறை ஒன்றை எடுத்து அதில் ஐந்தாறு பேராக தங்கிக் கொள்கிறார்கள். சினிமா, அரசியலை ஒதுக்கி ஓயாது பாட்டுக் கேட்கிறார்கள். இருவேளை உணவு உண்டு ஒரு வேளையை மிச்சம் பிடிக்கிறார்கள். மூன்று ஜதை உடைகளோடு முழு வருடத்தைக் கடக்கிறார்கள். உண்டி சுருக்கி சேமித்த பணத்தை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால், அரபு நாடுகளில் நமது தமிழ் சகோதரர்கள் என்ன பாடுபடுகிறார்களோ அதே பாடுதான். எல்லாம் எதற்காக? பெற்ற குடும்பம் பசி பட்டினியின்றி நிம்மதியாக தழைப்பதற்காக!

பிறந்த மண்ணை விட்டகல்வது என்பது பெருங்கொடுமை. அதனையும் மீறி நல்வாழ்வு கிடைக்கும் இடம்தேடி நகருமந்த எளிய வர்க்கத்தினரை வந்தேறிகள் எனத் தூற்றுவதும் துரத்துவதும் நியாயமாகுமா? தர்மம்தான் ஆகுமா?

வட நாட்டவர்கள் கூட்டம் கூட்டமாக வந்திங்கே குவிகின்றார்களே எனப் பதற்றம் கிளப்புபவர்கள், அவர்களல்லாது போனால் அந்த வேலையை இங்கே வேறு யார்தான் செய்வார்கள் எனும் நியாயமான கேள்விக்குத் தக்கதொரு பதிலைச் சொல்லும் தகவற்றவர்களாகவே நிற்கிறார்கள். பாழரசியல் செய்து குழப்பம் விளைவிக்கிறார்கள்.

அரசாண்மை என்றொன்று உண்டெண்டால் குடியாண்மை என்றொன்றும் உண்டெல்லவா? வந்து வாய்த்தது வாட்ஸ்அப், யூடியூப் என வகை தொகையின்றி அதில் வாறி இறைப்பது சரிதானா?  

உண்மைதான் என்ன?


இடைவிடாத திராவிட ஆட்சிகளின் பங்களிப்பால் கல்வித்தரமும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துவிட்ட இந்த மண்ணில் – தொழில் துறையில் மிக வேகமாக முன்னேறி வரும் தமிழ்நாட்டில்… இளைஞர்களுக்கு அடுத்தடுத்த கட்ட வேலைவாய்ப்புகள் அமைய – அது நோக்கி அவர்கள் நகர்ந்துவிட – விடுபட்ட இடத்தை வடவர்கள் வந்து நிரப்புகிறார்கள் என்னும் நியாயத்தை உணர்ந்தாக வேண்டும்.

“வட மாநிலங்களை விட நாம் நான்கு மடங்கு அதிக ஜி.எஸ்.டி. கட்டுகிறோம். கோடி பேருக்கு வேலையில்லை என்றால் வாங்கும் சக்தி எங்கிருந்து வந்தது என யோசிக்க வேண்டாமா?” என உரைக்கக் கேட்கிறார் இலுப்பக் கோரையிலிருந்து எழுந்த பொருளாதார பண்டிதரும் மாநில திட்டக் குழுவின் துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன்.

எந்த நியாயத்துக்கும் மசியாத சொந்த புத்தியற்ற சில சுயநலவாதிகள் அப்பாவி மக்களிடம் அநாவசிய பீதியை புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை கேரளாவில் ஒழித்துக் கட்டப்பட்ட ‘நோக்கு கூலி’ அதனை தமிழக மண்ணுக்குள் புகுத்தி சிறு, குறு தொழில்முனைவோரை அச்சுறுத்த அச்சாரமிடுகிறார்களோ என்னவோ?  

கலகம் உண்டாக்க விவேகம் தேவையில்லை. ஆனால், காரியமாற்ற அது அவசியமாகிறது.

விவேகத்தோடு நமது முதல்வர் காரியமாற்றி வருகிறார். அவரோடு ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியமும் கடமையும் தொழில்முனைவோருக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழுலகத்துக்குமானது.

இன்னும் கொஞ்சம் கவனிப்போம்.பொறுப்பற்று இங்கே சிலர் செய்யும் கலகங்கள் வடபுலத்தில் விரவி வாழும் தமிழர்களுக்கு எதிராக திரும்பி விடாதா? பாழரசியல் செய்பவர்கள் அங்கும் இருக்கக் கூடுமல்லவா? அப்படியான  சிலர் அப்பாவித்  தமிழர்களுக்கெதிராக திரும்பிவிட்டால் சொந்த இனம் நொந்து போகுமே எனும் அடிப்படை உணர்வுகூட இல்லாதவர்களின் தொப்பூழ் கொடி நொட்டலை என்ன சொல்லி நோவது?

சக மனிதர்களுக்கு எதிரான நேரடி வன்முறையை விட – வன்முறைக்கு வழிகோலும் சிந்தனையை விதைப்பது பேராபத்தானதாகும்.

மனங்கோணிய சிலர் மாச்சரிய கற்பனை ஒன்றையிங்கே விதைக்க முயற்சி செய்கிறார்கள். வேலை தேடி வரும் வடவர்கள் இங்கே குடியேற்றம் செய்து வாக்குரிமை பெற்றுவிடுவார்கள். அதனால் அவர்களை விரட்டியாக வேண்டும் என்கிறார்கள்.


வறுமை தொலைந்தால் போதும் என பிறந்த மண்ணை விட்டகன்று ஓடோடி வரும் அந்த உழைக்கும் வர்க்கத்தினரின் அல்லாடலுக்குள் அப்படியொரு குயுக்தியான எண்ணத்தைப் பொறுத்திப் பரப்புவது அநாகரிகமல்லவா?

அப்படியே அவர்கள் குடியேற்றம் பெற்றுவிட்டால்தான் என்ன? அவர்களும் இந்தியர்கள்தானே? அதனை மறுக்கத் துணிவது சட்டப்படி குற்றமல்லவா?

டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பற்பல  மாநிலங்களில் விரவி நிறைந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் ஆங்காங்கே வாக்குரிமை பெற்றவர்களாய் இருக்கவில்லையா?

என்.ஆர்.ஐ வாக்குகளும் இங்கே செல்லுபடியாகும் எனும்போது சொந்த நாட்டின் உயர்வுக்கு தங்கள் உழைப்பினை அள்ளித் தருபவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை மறுத்துவிட முடியுமா? கொஞ்சமெனும் சிந்திக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் வடநாட்டுத் தொழிலாளிகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது எனும் புரளி பீகார், உ.பி போன்ற மாநிலங்களில் தொற்றிப் பரவினால் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தாய்மார்களின் மனதில் அச்சமும் பீதியும் அப்பிக் கொள்ளுமல்லவா?

அய்யகோ… அம்மவோ… இது என்ன புதுக் கேடு? வறுமையில் வாடினாலும் பரவாயில்லை உயிர் பிழைத்திருந்தால் போதும் எனத் தங்கள் குடும்பத்து ஆண்களை உடனடியாக ஊர் திரும்பிவிட வற்புறுத்தக் கூடுமல்லவா?  

குடும்பத்தின் நிம்மதிதான் பெரிது எனக்கருதி உழைக்க வந்தவர்கள் கொத்துக் கொத்தாக ஊர் திரும்பி விடுவார்களேயானால் தொழில்துறையில் வேகமாக முன்னேறி வரும் தமிழ்நாட்டுக்கு அது மிகப் பெரும் பின்னடைவாகப் போகுமல்லவா?

அதுவே சிலரது உள்நோக்கமாகுமெனில் அந்த நச்சு எண்ணத்தை முளையிலேயே கிள்ளி முற்றாய் அழித்து விடுவது நல்லது.

சொல்லப்போனால், தொழில் துறையில் தமிழ்நாடு விரைந்து முன்னேற அயராது உழைக்குமந்த எளிய தொழிலாளிகளை நன்றியோடு நாம் வாழ்த்தியாக வேண்டும்.

தமிழ்நாடு தன்னை நம்பி வந்தோரை கிஞ்சித்தும் விட்டுக்கொடுத்து விடாது என்பதை அகண்டதிந்த தேசத்துக்கு அறிவித்தாக வேண்டும்.

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

ஐந்தறிவையும் அரவணைத்து உயரச் சொன்னது பாரதியின் பாப்பா பாட்டு. எனில், சக மனிதர்களை அன்பு கொண்டு அணைப்பதல்லோ ஆறறிவுக்கு அழகு!

மாச்சரியம் விலக்கி மனிதம் பழகலாம்.
மணக்குமே உலகெலாம்!

கட்டுரையாளர் குறிப்பு

Sriram Sharma visit to Mumbai for Velu Nachiyar works

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

  1. சாதி வைத்து ஓட்டரசியல் செய்த கயவாளிகள் இப்போது மாநிலம் தாண்டி தமிழகம் தழைக்க பாடு பட வரும் ஏழைகளை குறி வைத்து நஞ்சை வீசிவது பெரும் கேடு..இந்திய மக்களில் யார் வந்தேறிக்கள் என பிரித்து பார்ப்பது படு கேவலம் இல்லையா! மொழி அரசியல் செய்யும் காமுகர்களை ஆரம்பத்தில் கண்டிக்காத இந்த திராவிட அரசாங்கங்கள் தான் அயோக்கியர்கள்…
    கட்டுரையாளருக்கு மனதார வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published.