கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிசிடிவி ஆவண பதிவுகள் முக்கிய சாட்சியாக விளங்கியது என்று கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் இன்று (ஜூன் 2) உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.
இதுகுறித்து கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சென்னை உயர்நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டார் என்ற அடித்தளத்தை யுவராஜ் உருவாக்க பார்த்தார். கோகுல்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று அனைத்து ஊடகங்களிலும் யுவராஜ் தெரிவித்தார். இந்த வழக்கில் சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியங்கள் பொய் சொல்லாது என்ற அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை நீதிபதிகள் முக்கிய சாட்சியமாக ஏற்றுக்கொண்டனர். சிசிடிவி பதிவுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் திருச்செங்கோடு மலையில் யுவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோகுல்ராஜை சந்தித்திருப்பது உறுதியாகியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு தனியாக மருத்துவ நிபுணர் ஒருவரை அமைத்து கோகுல்ராஜுக்கு உடற்கூறாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்ட கோரிக்கை தான் இந்த வழக்கின் அடித்தளத்தை மாற்றியுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கை கோகுல்ராஜ் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று உறுதிப்படுத்தியது. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 10 பேருக்கும் வாழ்நாள் முழுக்க தண்டனை என்பது மிகவும் முக்கியமானது. மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் நிகழும் சாதி ஆணவ கொலைகளுக்கு சட்டத்தில் தண்டனை கிடைக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கோடை விடுமுறை நிறைவு: 2,200 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கலைஞர் நூற்றாண்டு விழா: ஆளுநரை நக்கலடித்த துரைமுருகன்