மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு தற்சமயம் அறிவுறுத்தல்தான் வழங்கமுடியும், நடவடிக்கை எடுக்கமுடியாது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நேற்று(நவம்பர் 10) இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, “சென்னையில் மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை 8.30 மணி வரை 64.5 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் மழையின் காரணமாக தற்போது வரை விழுந்த அனைத்து 92 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து 16 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. கொளத்தூர் பகுதியில் மட்டும் 82 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது.
906 மோட்டார்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் தயார் நிலையில் உள்ளது. இன்றைய மழையில் புளியந்தோப்பு, பட்டாளம், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை.
மோட்டார் பம்புகளை பொருத்தி துரிதமாக மழை நீரை வெளியேற்றி வருவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் இதற்கு காரணம்” என்றார்.
அப்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் ஏற்படும் விபத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கின்றது. மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் வைக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தற்போதைய சூழலில் அறிவுறுத்தல் தான் கொடுக்க முடியும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணி தாமதம் ஆகிவிடும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
கலை.ரா
15 மாதத்தில் 1.5 லட்சம் இலவச மின்இணைப்புகள்: முதலமைச்சர் பெருமிதம்!
ட்விட்டர் திவால்: எலான் மஸ்க் தரும் ஷாக்!