P. Chidambaram criticism admk

”இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு” : ப.சிதம்பரம் விமர்சனம்!

அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு என்றும், மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் சமீபத்தில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி,  நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதே வேளையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக நேற்று அறிவித்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பல்வேறு கட்சியினரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அதிமுகவின் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

அவர் தனது பதிவில்,  “விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு என்பது என்.டி.ஏ வேட்பாளரின் (பாமக) தேர்தல் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் இருந்து உத்தரவு பெற்றுள்ளது என்பதற்கான தெளிவான சான்று.

இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பினாமி (பாமக) மூலம் போரிடுகின்றன.

தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் மகத்தான வெற்றியை இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்” என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

AUSvsSCO : போராடி தோற்ற ஸ்காட்லாந்து… தலை தப்பிய இங்கிலாந்து!

10,020 பேருந்துகள் அகற்றப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0