வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த விவாதம் உள்ளிட்ட வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“முதலில் ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிமுகவின் மாசெக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் என அறிவிக்கப்பட்டது. பின் அது மாற்றப்பட்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த அவசர செயற்குழுக் கூட்டம் எதற்காக என்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
முதலில் மாசெக்கள் கூட்டம்தான் அறிவிக்கப்பட்டது. அதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியாது என்பதால்தான், அவசர செயற்குழுக் கூட்டமாக மாற்றப்பட்டது. அதிமுகவின் கட்சி விதிகளின்படி செயற்குழுக் கூட்டம் வருடத்துக்கு இரு முறைதான் கூட்ட முடியும். அப்படி கூட்டுவதற்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். முக்கியத்தும் வாய்ந்த பிரச்சினைகளை விவாதிக்க அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டலாம். அந்த வகையில்தான் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து சுமார் ஒரு மாத காலமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது அதிமுக. இந்தக் கூட்டங்கள் பற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் மனம் விட்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர், ‘மணியடிச்சா சோறுங்க… மயிர் வளந்தா மொட்டைங்க… என்று தன்னிடம் சில கிளைக் கழக நிர்வாகிகள் சொன்னதை சொல்லி சில விஷயங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அதாவது சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மணியடித்தால் கரெக்ட்டாக சோறு போட்டு விடுவார்கள். அதேபோல அவர்களுக்கு தலைமுடி வளர்ந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் அதை பிடித்து சண்டை போட்டுக் கொள்வார்கள் என்பதற்காக மொட்டையடிப்பது போல தலைமுடியை குறைத்துவிடுவார்கள்.
இதேபோல திமுக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தில், மாதம் 15 ஆம் தேதியானால் கரெக்ட்டாக பெண்களின் வங்கிக் கணக்கில் 100o ரூபாய் வந்து விழுந்துவிடுகிறது. அதனால் அதிமுகவின் வாக்கு வங்கியாக திகழ்ந்த பெண்கள் பலர் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் என்னிடம் பேசிய கிளைச் செயலாளர்களே, ‘என் மனைவிக்கு ஆயிரம் ரூபாய் மாதாமாதம் வந்துவிடுகிறது. விடியல் பயணம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் கையில் இருந்து செலவாகாமல் மிச்சமாகிறது. ஆயிரம் ரூபாய் வரவு… ஆயிரம் ரூபாய் செலவு இல்லை. ரெண்டாயிரம் மிச்சம். அதனால நம்ம வீட்டுப் பெண்களே ஸ்டாலினுக்குதான் ஓட்டு போட்டிருக்காங்க’ என சொல்றாங்க.
அதிமுகவின் அச்சாணியான பெண்கள் ஓட்டு வங்கியை ஸ்டாலின் மெல்ல மெல்ல கைப்பற்றி வருகிறார். இதைத் தடுத்து, பெண்கள் வாக்குகளை நாம் பழையபடி தக்க வைக்க என்ன செய்யணும்னு சொல்லுங்க. இதுதான் இப்ப முக்கியம். ஓபிஎஸ், சசிகலா எல்லாம் இப்ப முக்கியம் இல்லை’ என்று நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் கையைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கும் பெண்கள் வாக்கு வங்கியை அதிமுக மீண்டும் எப்படி மீண்டும் பெறுவது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி : மோடி, ராகுல் வாழ்த்து… பரிசு அறிவிப்பு!
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தாமதம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்!