ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தீர்மானத்தை விவாதிக்கவில்லை என்று காரணம் சொல்லி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 10) சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது அவை முன்னவர் துரைமுருகன், “எதிர்க்கட்சி தலைவர் சொல்வதை ஏற்க கூடாது என்பதல்ல. இன்றைக்கு அரசினர் தீர்மானம் உள்ளது.
ஆகையால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம்” என்று பேசினார். இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”எங்கள் கட்சியில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேரவைத் தலைவரிடம் கொடுத்தும் இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.
எங்கள் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவரை தற்போதுவரை நீங்கள் அங்கீகரிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசுவது நேரடிஒளிபரப்பு செய்வதில்லை. அமைச்சர்கள், முதலமைச்சர் பேசுவது மட்டும்தான் நேரடிஒளிபரப்பு செய்யப்படுகிறது” என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த சபாநாயகர், ”அரசினர் தீர்மானம் உள்ளதால் கவனஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். எனவே அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு அளியுங்கள்” என்று பேசினார்.
சபாநாயகரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடாவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சபாநாயகரை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம்: சட்டமன்ற வாயில்கள் மூடல்!
டிஜிட்டல் திண்ணை: டெல்லி விருந்து… முருகனுக்கு மோடி கொடுத்த சிக்னல்!