முதல்வரின் பதிலுரையைப் புறக்கணித்த அதிமுக: சபாநாயகர் வருத்தம்!
சட்டமன்றத்தில் முதல்வரின் பதிலுரையைப் புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்ரல் 21) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி வருகிறார்.
ஆனால் அதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் பேசுவதை நேரலை செய்யவில்லை என்று அமளியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் சபாநாயகர், “முதலமைச்சர் பதிலுரை வழங்கும் போது மரபு படி நடந்து கொள்ளுங்கள். தயவு செய்து அமருங்கள். நீங்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. எனவே தயவு செய்து அமரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இதனால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினர். தொடர்ந்து, சபாநாயகர், “வெளிநடப்பு செய்பவர்கள் ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேட்டு விட்டு செல்லுங்கள்” என்று சொன்னார்.
தொடர்ந்து, “ இந்த அரசு பதவியேற்ற பிறகு தான் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்து கேள்வி நேரம் பகுதியினை ஒளிபரப்பு செய்து வருகின்றோம்.
இந்த நிலையில் எங்களை நேரலையில் காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் பதிலுரையின் போது பங்கேற்க மாட்டோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பலமுறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரும் அந்த வாய்ப்பை கொடுத்து ஜனநாயக மாண்பைக் காத்திருக்கிறார்கள்.
சட்டமன்றம் நடைபெறும் அனைத்து நாட்களும், அமைச்சர்கள் பதிலுரை வழங்கும் போது அமர்ந்திருக்கிறார்கள். ஒரே ஒரு நாள் வைக்கம் நூற்றாண்டு விழாவிற்காக கேரளா சென்றபோது சட்டமன்றத்திற்கு வரவில்லை.
எதிர்க்கட்சி கொறடா, காமராஜை அழைத்து வந்து என்னிடம், நானும் அருகில் இருக்கின்ற கருப்பண்ணனும் ஏதோ தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு தொலைக்காட்சியில் செய்தி வருகின்றது.
தயவுசெய்து அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதனால் தான் நாங்கள் நேரலையில் ஒளிபரப்பவில்லை.
கேள்வி நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் பேசிக்கொண்டிருந்ததோ அல்லது என்ன செய்தீர்களோ அது தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அது உங்கள் மனதையும் புண்படுத்தியுள்ளது. இந்த அவையில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் செயலையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும். முதலமைச்சரின் பதிலுரையை கேட்காமல் எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்வது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.
இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மோனிஷா
மம்மூட்டியின் தாயார் காலமானார்!
சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!