அதிமுக – பாஜக… பிரச்சனை என்று கூறினோமா?: செல்லூர் ராஜூ
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று நாங்கள் கூறினோமா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (செப்டம்பர் 21) தெரிவித்துள்ளார்.
அதிமுக – அண்ணாமலை இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி அறிவித்தார்.
ஆனால் இந்த அறிவிப்பு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை வாய் திறக்காமல் இருந்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்,
“அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மதுரை மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேலு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும், மதுரை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் பாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ,
“தம்பி உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுப் பிள்ளையாகவே உள்ளார். சனாதனம் அண்ணா பெரியார் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது.
சீர்திருத்த திருமணங்களை நடத்தியவர் அண்ணா, அவர்களது தாத்தா, ஜெயலலிதா, எடப்பாடியார் வரை தற்போது பின்பற்றி வருகிறோம்.
அண்ணா, பெரியார் கொண்டுவர வேண்டிய மாற்றத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்துவிட்டார். சத்துணவுத் திட்டம் மூலமாக சமமாக அமர வைத்து உணவளித்தார்.
இஸ்லாமியர்களை கைலி கட்டியவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என அவர் தாத்தா காலத்தில் கூறினார்கள். அதெல்லாம் உதயநிதிக்கு தெரியாது. திமுக தேர்தல் வருவதற்கு முன்பு ஒன்று பேசுவார்கள். தேர்தலுக்கு பின்பு ஒன்று பேசுவார்கள்.
திமுக 1000 ரூபா கொடுத்ததற்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஒரு கோடியே ரூ.6 லட்சம் பேருக்கு தான் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். மீதி பேருக்கு ஸ்வாகா தான்.
பாஜகவிற்கும் எங்களுக்கும் பிரச்சனை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா?., மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தான் தவறு என கூறினோம். எங்களை நட்டா ஜி, அமித்ஷா ஜி, மோடி ஜி, மதிக்கிறார்கள். அது போதும். நாங்களும் நாளை மோடிஜி தான் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி யார் தான். ” என்று தெரிவித்தார்.
சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு: ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!