இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்கக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 27) முறையீடு செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சேலத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது நிர்வாகிகளிடம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அதிமுக பொதுக்குழு வழக்கில் நமக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் இரட்டை இலை சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எடப்பாடி தரப்பு தனது டெல்லி லாபியை பயன்படுத்தித் தீர்ப்பை விரைந்து வரவைக்க முயற்சிகள் செய்தது.
இந்த சட்ட முயற்சிகளுக்கு இடையே இடைத்தேர்தலை முன்னிட்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று ஆலோசனை அளித்துள்ளார்கள்.
இதையடுத்து அவசரமாக இன்று எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதால் தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு முறையீடு செய்துள்ளார்.
வழக்கின் தீர்ப்பை விரைந்து அளிக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதையும் அந்த முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு வரும் 30ஆம் தேதி இதுகுறித்து மனு தாக்கல் செய்ய கூறியுள்ளது.
பிரியா
சோமாலியா: ஐஎஸ்ஐஎஸ் அல் சூடானியை தீர்த்துக்கட்டிய அமெரிக்கா
அரோகரா… அரோகரா… : 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் குடமுழுக்கு!