அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பாக மூன்று நாட்களில் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் கேவியட்மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.
இந்தச்சூழலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தியது.
அதன்படி இன்று(ஜனவரி 30), தான் கையெழுத்திடும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், “கடந்த ஜூலை 11ஆம்தேதி நடந்த பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதை ஏற்றுக்கொண்டால் தான் இடைத்தேர்தல் பி படிவத்தில் கையெழுத்திட முடியும். அப்போதுதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்று ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று எடப்பாடி தரப்பு வாதிட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராகச் சேர்த்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை மட்டுமே நடைபெறும்.
அதை தவிர வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பிரியா
காந்தியடிகள் நினைவு தினம்: ஆளுநர் முதல்வர் மரியாதை!
விசிக நிர்வாகிகளை விடிய விடிய வேட்டையாடிய காவல் துறையினர்!