டிஜிட்டல் திண்ணை: விஜய் சொன்ன கணக்கு… தலைசுற்றும் எடப்பாடி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தமிழக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் லிங்க் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அந்தப் பேட்டியை முழுதாக பார்த்துவிட்டு அதன் பின் அதிமுக, தவெக கட்சி வட்டாரங்களில் பேசிவிட்டு வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. admk tvk alliance status now

“பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வியூகம் வகுத்துக் கொடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர், அடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் மேடையேறினார்.

அப்போது பேசிய அவர் 2026 இல் தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பார் அந்த விழாவில் நான் முழுமையாக தமிழில் பேசுகிறேன் என்று கூறினார்.

அதன்பிறகு தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது.

ஆனால் விஜய் தன்னுடைய தலைமையில் அணி அல்லது தனித்து போட்டியிடுவது என்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார். அரித்மேட்டிக் கணக்காக தேர்தலைப் பார்க்காமல்,  தமிழகத்தில் ஒரு புதிய மாற்று சக்திக்கான தேவையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அதே நேரம் தமிழக வெற்றி கழகத்திற்கு மாநிலம் முழுவதும் கட்டமைப்பு பலம் அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைத்திருக்கிறார். admk tvk alliance status now

இந்தப் பேட்டியின் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்பது போல கூறியுள்ள பிரசாந்த் கிஷோர், அதே நேரம் இன்னொரு முக்கியமான ட்விஸ்டையும் வைத்திருக்கிறார். அதாவது வருகிற டிசம்பர் மாதம் வரை இந்த நிலைமை மாறாது. அப்படி மாறுகிறது என்றால் ஜனவரி, பிப்ரவரியில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறி இருக்கிறார்.

பிகேவின் இந்த பேட்டி தமிழ்நாடு அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜகவோடு கூட்டணி இல்லை என்று உறுதியாக முடிவெடுத்துள்ள எடப்பாடி, தனது அடுத்த சாய்ஸாக விஜய்யை கருதி அவரோடு பூர்வாங்க கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவிலும் சரி அதற்கு பிறகு அளித்த பேட்டியிலும் சரி தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிடும் என பிகே கூறியதுதான் இந்த கூட்டணியில் சிக்கலா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைய வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அதனால்தான் அவர் பாஜகவை தவிர்த்து அனைவரையும் அதிமுக கூட்டணியில் இணைக்க முயல்கிறார்.

இந்த நிலையில் விஜய் கட்சியோடு அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. எடுத்த எடுப்பிலேயே விஜய் தரப்பில் கிட்டத்தட்ட 100 சீட்டுகள் வேண்டும் என்று டிமாண்ட் வைத்தனர். அதாவது  சரி பாதி இடங்கள் வேண்டும் என்று கேட்டனர்.

’இதுவரை தேர்தலையே சந்திக்காத நீங்கள் எந்த அடிப்படையில் நூறு இடங்கள் கேட்கிறீர்கள்?’ என்று எடப்பாடி தரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்டது.

அப்போது விஜய் தரப்பில், ‘நாங்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சர்வே அடிப்படையில் எங்களுக்கு 25% வாக்கு வங்கி உறுதியாக இருக்கிறது. அந்த அடிப்படையில் 100 இடங்கள் வேண்டும்’ எனக்கேட்டு மேலும் சில மலைக்க வைக்கும் நிபந்தனைகளையும் முன் வைத்துள்ளனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனக்கு நெருக்கமான சில ஏஜென்சிகள் மூலம் தமிழ்நாட்டில் விஜய்யின் உண்மையான பலம் என்ன என்று அறிய அவரும் ஒரு ஆய்வை தனியே நடத்தியுள்ளார்.

விஜயின் சினிமா பலம் அவருக்கு அரசியல் பலமாக மாறுமா, அவரது ரசிகர்கள் அவருக்கு வாக்களிக்கும் வாக்காளர்களாக மாறுவார்களா என்ற அடிப்படையிலான இந்த ஆய்வில் எடப்பாடி பழனிசாமிக்கு சில முக்கியமான தரவுகள் கிடைத்துள்ளன.

அதாவது விஜய் தமிழ்நாடு தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் ரசிகர்களை பெற்றிருந்தாலும்… அரசியல் ரீதியாக அவருக்கு தமிழ்நாட்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் ஒரே சீரான செல்வாக்கு இல்லை. வடதமிழ்நாட்டில் மட்டுமே விஜய்க்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அதுவும் குறிப்பாக தலித் மக்கள் மத்தியில் விஜய்க்கு பெரிய கவர்ச்சி இருக்கிறது. admk tvk alliance status now

அதைத் தாண்டி தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் விஜய்க்கு அந்த அளவு செல்வாக்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அந்த ஆய்வில் அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த அடிப்படையில் விஜய் கேட்ட 100 சீட்டுகள் என்பதில் அதிமுக எந்த பதிலையும் உறுதியாக அளிக்கவில்லை. அதுமட்டுமல்ல அவ்வளவு இடங்கள் அளித்தால் அது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறார் எடப்பாடி. அதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் அப்படியே நிற்கிறது.

இந்த நிலையில்தான் தங்களுடைய பேர வலிமையை கூட்டுவதற்காக, விஜய் தொடர்ந்து தன்னை முதன்மை சக்தி என்று குறிப்பிட்டு வருகிறார். மேலும், அவருடைய நண்பர் மற்றும் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு அரித்மேட்டிக் கணக்கை தாண்டிய செல்வாக்கு இருக்கிறது என்று கூறுகிறார்.

இதேநேரம் ஐ பேக்கில் ஏற்கனவே பணியாற்றிய சிலர்  இன்னொரு புதிய கோணத்தையும் முன்வைக்கிறார்கள்.

’பிரசாந்த் கிஷோர் எதிர் அணியை குழப்புவதில் வல்லவர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் அதிமுக புள்ளிகளையும் சந்தித்தார். அதிமுகவினரை சந்தித்து விட்டு சென்றவர் அடுத்ததாக சபரீசனை சந்தித்தார். அதன்பிறகு தான் அவர் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்போதும் பிரசாந்த் கிஷோர் அதேபோன்ற சில வேலைகளை செய்கிறார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்து நிற்க வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக விரும்புகிறது. அப்போதுதான் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறி மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்பது திமுக போடும் கணக்கு. admk tvk alliance status now

இந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணியை இப்போதே உறுதிப்படுத்தி விட்டால் அதைப் பிளக்கும் வேலைகளை ஆளுங்கட்சி தீவிரமாக செய்யும். எனவே இப்படிப்பட்ட பேட்டிகள் கொடுப்பதன் மூலம் அதிமுகவுக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி அதை திமுகவை நம்ப வைத்து குழப்பத்தில் வைத்திருப்பது என்பது கூட பிரசாந்த் கிஷோரின்  ஸ்டேட்டர்ஜியாக இருக்கலாம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share