டிஜிட்டல்  திண்ணை: பத்து நாளில் இரட்டை இலை முடக்கம்? டெல்லி டெரர்… எடப்பாடி ஷாக்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் இளம் பெண்கள் பாசறை மாநாடு வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. ADMK symbol freeze Edappadi shock

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜ்ஜை டைப் செய்ய தொடங்கியது.

“அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

தேர்தல் ஆணையம் தலையிடலாம்…

தீர்ப்பு வந்த அன்று, அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த பேட்டியில், ’தேர்தல் ஆணையம் ஒரு குமாஸ்தா தான் அதற்கு ஒரு அரசியல் கட்சியின் கட்சி விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை’   என ஆவேசமாக தெரிவித்தார். அதே நேரம் தேர்தல் ஆணையத்தின் முடிவு,  இந்த விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

அதே நாளில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என கூறினார்.

மறுநாள் பன்னீர்செல்வம் ரிலாக்சாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். ADMK symbol freeze Edappadi shock

அப்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா எடுத்த முயற்சியை அப்படியே லைவ்வாக விவரித்தார்.

அதிமுகவை ஒன்றிணைக்க அரும்பாடுபட்ட அமித் ஷா

டி.டி.வி. தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு அமித்ஷா வற்புறுத்தியபோது அதை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அவர்களுக்கென தனியாக சீட்டுகள் அளிக்க வேண்டாம் எங்களுடைய பாஜகவின் சீட்டுகளில் தினகரனுக்கு நாங்கள் உள் ஒதுக்கீடு அளிக்கிறோம் என்று அமித்ஷா கூறிய போதும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

கடைசியில் தினகரனை நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். நான் சொன்னால் தினகரன் கேட்பார். ஆனால் அதிமுக ஆட்சி அமைந்ததும் அவருக்கு உரிய சில விஷயங்கள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என அமித்ஷா கேட்டபோது அதையும் ஏற்க மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படி ஒருங்கிணைந்த அதிமுக உருவாக அமித்ஷா எடுத்த அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமி கெடுத்தார். அதனால்தான் அதிமுக 2021ல் ஆட்சிக்கு வர முடியவில்லை என புட்டுபுட்டு வைத்தார் ஓ பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் தான் அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு… எடப்பாடி எதிர்ப்பாளர்களுக்கு உற்சாக டானிக்காக மாறிவிட்டது.

தீர்ப்பு வந்து ஒரு வாரம் ஆகப்போகிற நிலையில்… டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து சி.வி. சண்முகத்துக்கு நெருக்கமான சில அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை அவரிடம் தெரிவித்துள்ளனர். ADMK symbol freeze Edappadi shock

டெல்லி தந்த ஷாக்!

சமீப வருடங்களாக அதிமுகவின் தேர்தல் ஆணையம் சம்பந்தமான வேலைகளை சி.வி. சண்முகம்தான் மேற்கொள்கிறார். அந்த வகையில் டெல்லி தேர்தல் ஆணையத்தில் அவருக்கு நட்புகள் கணிசமாக இருக்கிறார்கள்.

அவர்கள் மூலமாக, ‘விரைவில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இன்னும் பத்து நாட்களில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைப்பதை பற்றி கூட ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. சின்னத்தை முடக்கி விட்டால் அதன் பிறகு நீதிமன்றம் செல்லட்டும்… அங்கே பார்த்துக் கொள்ளலாம். அதற்குள் 2026 சட்டமன்ற தேர்தல் வந்துவிடும்’ என்றெல்லாம் தேர்தல் ஆணையத்தில் அதிமுக தொடர்பாக ஸ்கெட்ச் போடப்படுவதாக சி.வி. சண்முகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத்  தகவல் கிடைத்ததும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள்.

ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் அதிமுகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பதற்காக பாஜக தலைமை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை உணர்ந்துதான் அண்ணாமலை கூட தற்போது அதிமுக அட்டாக்கை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி முடிவெடுத்து… அதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் பாஜக விரும்புகிற வகையில் அதிமுகவை மாற்றி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

வேண்டுகோள் வைத்த எடப்பாடி

இதை உணர்ந்துதான் நேற்று வேலூரில் நடந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.  புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி கிடையாது என மிரட்டலாக அறிவித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார். ADMK symbol freeze Edappadi shock

’நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து முடிவெடுங்கள்’ என மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே இங்கே செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் எதிர் குரல்  எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். மேலும் தேர்தல்  ஆணையத்தின் மூலம் சில நிகழ்வுகள் நடப்பதாக தகவல் வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பாஜக அட்டாக்கை மேலும் குறைத்திருக்கிறார் என அதிமுகவினரே கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share