நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது.
அது நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை தவிர்க்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும். கூட்டாட்சி மற்றும் மாநிலம் ஆகிய இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாங்கத்திற்கும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும்.
இந்த செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். இது சிறந்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஜனநாயக பங்கேற்புக்கு வழிவகுக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவிக்கப்படும் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே ஆட்சியின் முக்கிய மையமாக இருக்கும்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் குழு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
அப்போது, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
’இந்தியா’ கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் யாரு?: அப்டேட் குமாரு!
வடநாடு கொலை வழக்கில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க எடப்பாடி பழனிச்சாமி அரைகூவல் கூவுகிறார்