தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை: அதிமுக விமர்சனம்

அரசியல்

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலடியாக நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கியது பாஜக தான் என்றும், தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை என்றும் அதிமுக ஐடி பிரிவு பொதுச்செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5ம் தேதி கட்சியில் இருந்து விலகி, உடனடியாக எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அவரைத்தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட மேலும் சில நிர்வாகிகளும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ”திராவிடக் கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்று பாஜகவிலிருந்து ஆட்களை எடுத்து சென்றால் தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜகவினரை இணைத்துக்கொண்டு தாங்கள் வளர்ந்துவிட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறது.

பாஜகவில் இருந்து அதிமுக யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை இருக்கும்.” என்று அண்ணாமலை எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தினர்.

இதனால் ஒரே கூட்டணியில் இருந்து வரும் அதிமுக-பாஜகவுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நோட்டாவை விட குறைவான வாக்கு

இந்நிலையில் அண்ணாமலையின் பேட்டிக்கு பதிலடியாக அதிமுக ஐடி பிரிவு பொதுச்செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில் “NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக MLAக்கள் எப்படி வென்றார்கள் என்பதே இதற்கான பதில்!

அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம்.

நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க, அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகைப்புக்குரியது!” என்று அவர் நேரடியாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

நாங்களும் வேறமாறி பதிலடி கொடுப்போம்

இதனைத்தொடர்ந்து சன் செய்தித் தொலைக்காட்சிக்கு சிங்கை ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ”அதிமுகவை வளர்ப்பதற்காக பாஜகவில் இருந்து நிர்வாகிகளை எடுக்கிறோம் என்று அண்ணாமலை பேட்டி கொடுத்திருந்தார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதிமுக 1.50 கோடி தொண்டர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கம். யாருக்கு தமிழ்நாட்டில் தயவு வேண்டும் என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.” என்றார்.

மேலும், “இப்போது கோவில்பட்டியில் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக கேள்விப்பட்டோம்.

இது போன்ற செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதே போன்ற செயல்கள் தொடர்ந்தால் நாங்களும் (அதிமுகவினர்) வேறமாதிரி பதிலடி கொடுப்போம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கசக்கும் சமூகநீதி : ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கரு.பழனியப்பன்

அமர்பிரசாத் ரெட்டி அறியாமையில் பேசுகிறார்: கே.பி.முனுசாமி

+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *