அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி குறித்து யூகங்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று (மார்ச் 1, 2024) முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட குழுவினர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதாவின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தனர்.
தேமுதிக தரப்பிலிருந்து 5 லோக்சபா தொகுதிகளும், 1 ராஜ்யசபா தொகுதியும் வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பிலிருந்து ராஜ்யசபா சீட்டு ஒதுக்குவதற்கு தயாராக இல்லை. ஆனால் தேமுதிக ராஜ்யசபா சீட்டு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இன்று நடைபெற்ற சந்திப்பிலும் ராஜ்யசபா சீட்டு குறித்தே அதிகம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மிகக் குறிப்பாக ராஜ்யசபா சீட்டைப் பொறுத்தவரை நான் கட்சியில் வேறு யாருக்கோ கேட்கவில்லை, எனக்குத் தான் கேட்கிறேன் என்று நேரடியாகவே பிரேமலதா கேட்டிருக்கிறார்.
ஆனால் அதிமுக தரப்பில் குழு வந்து பேசி முடிவெடுக்கும் என்று சொல்லிவிட்டார்களாம். இதனையடுத்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, “நாங்கள் மரியாதை நிமித்தமாகத் தான் பிரேமலதாவை சந்திக்க வந்தோம். இரண்டு கட்சிகள் சார்பாகவும் குழுக்கள் அமர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தும்” என்று கூறி கிளம்பினார்.
அதிமுகவிற்கே ஒரு ராஜ்யசபா சீட்டு தான் கிடைக்க வாய்ப்பிருக்கும் நிலையில், கூட்டணிக்காக பேசும் பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் ராஜ்யசபா வேண்டும் என்று கேட்கிறார்கள். அதனால் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டு இல்லை என்று அதிமுக கறாராக சொல்லிவிட்டதாம். இதனால் அதிமுக-தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தை என்பது மரியாதை நிமித்தமான சந்திப்பாக மாறிப் போயுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி… திமுக நிர்வாகி கொலை: பகீர் பின்னணி!
எலக்ஷன் ஃபிளாஷ்: அருண் நேருவுக்கு எதிரான வேட்பாளர் யார்?
சீமானிடமிருந்து கை நழுவிப் போகிறதா கரும்பு விவசாயி சின்னம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?