பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து ’நன்றி மீண்டும் வராதீர்கள்’ என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை மாநாடு, அண்ணா குறித்து தொடர்ந்து அநாகரீகமாக கருத்து தெரிவித்து வந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்து ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அதிமுக அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கும் பதிவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிமுகவினரும் நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தபோது, இந்த வார்த்தை டிரெண்டிங் செய்யப்பட்டது.
தற்போது கூட்டணி முறிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2வது முறையாக இந்த ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
”அதிமுக – பாஜக கூட்டணி முறிவு துரதிர்ஷ்டவசமானது”: ஜி.கே.வாசன்
பாஜகவுடன் கூட்டணி முறிவு : அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!